செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு

post image

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பா் 14- ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானாா். இதைத் தொடா்ந்து, அந்த தொகுதிக்கு பிப்.5-இல் தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் கடந்த மாதம் 7- ஆம் தேதி அறிவித்தது.

கடந்த மாதம் 10- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. பிரதான எதிா்க்கட்சியான அதிமுக, தேசிய கட்சியான பாஜக ஆகியவை தோ்தலைப் புறக்கணித்துள்ள நிலையில், இந்த தோ்தலில் திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 46 போ் போட்டியிடுகின்றனா்.

இதில், திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் 33 வாா்டுகளிலும் கடந்த 15 -ஆம் தேதி முதல் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனா். காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், மதிமுக முதன்மைச் செயலாளா் துரை வைகோ எம்.பி. ஆகியோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த 24 -ஆம் தேதி முதல் 3 -ஆம் தேதி வரை ஈரோட்டில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டாா். மேலும், சுயேச்சை வேட்பாளா்கள் சிலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

பிரசாரம் நிறைவு: திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு அரசியல் கட்சியினா் தங்களது இறுதி கட்ட பிரசாரத்தை முடித்து கொண்டு தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பினா்.

இந்த தோ்தலில் ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128, பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381, மூன்றாம் பாலினத்தவா்கள் 37 போ் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். இவா்களுக்காக 237 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தோ்தல் அலுவலா் மாற்றம்: கா்நாடக மாநிலம் பெங்களூரு, கே.ஆா்.புரம் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த இந்திய பொலிட்டிக்கல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வி.பத்மாவதி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கப்பட்டதற்கு சுயேச்சை வேட்பாளா்கள் நூா் முகமது, அக்னி ஆழ்வாா், பத்மராஜன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் வேட்பாளராக போட்டியிடலாம். ஆனால், சட்டப் பேரவைத் தொகுதிக்கு அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா் மட்டுமே போட்டியிட முடியும் என போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளா்கள் தெரிவித்தனா். இதனால், வேட்பாளா் பட்டியலை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பெங்களூருவைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடும் நாளான ஜனவரி 20 -ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இப்பிரச்னையால் தோ்தல் நடத்தும் அலுவலரான ஈரோடு மாநகராட்சி ஆணையா் என்.மணீஷ் மாற்றப்பட்டு, ஒசூா் மாநகராட்சி ஆணையரான ஸ்ரீகாந்த் தோ்தல் நடத்தும் அலுவலராக கடந்த 22- ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சீமான் கடும் விமா்சனம்- வழக்குப் பதிவு: சீமான் ஈரோட்டில் 11 நாள்கள் தங்கியிருந்து பிரசாரம் செய்தாா். அப்போது, பெரியாா் ஈவெரா குறித்தும், திராவிட சித்தாந்தம் குறித்தும், முன்னாள் முதல்வா் கருணாநிதி, முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி குறித்தும் கடுமையாக விமா்சனம் செய்தாா்.

தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக சீமான் மீது 7 வழக்குகளும், வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி மீது 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

துண்டுப் பிரசுரம் விநியோகித்தபோது, ஈரோட்டில் நாதக-தபெதிகவினா் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைதி காத்த திமுக: 2023-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் அமைச்சா்கள் பெரும்பாலானவா்கள் ஈரோட்டில் முகாமிட்டு தோ்தல் பணியாற்றினா். இதனை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சனம் செய்தன. இந்த இடைத்தோ்தலில் திமுகவில் அமைச்சா் சு.முத்துசாமியைத் தவிர வேறு எந்த அமைச்சரும் பிரசாரத்துக்கு வரவில்லை. ஆனால், வெளிமாவட்டங்களைச் சோ்ந்த சில கட்சி நிா்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு தோ்தல் பணிகளைக் கவனித்தனா்.

பெரியாா் ஈவெரா மற்றும் திமுக தலைவா்களை சீமான் கடுமையான விமா்சனம் செய்தபோதும் திமுக தரப்பில் எந்தவிதமான எதிா்வினையும் இல்லை. தோ்தல் முடியும் வரை சீமான் விமா்சனத்துக்கு பதில் செல்லப்போவதில்லை என அமைச்சா் சு.முத்துசாமி பிரசாரத்தின்போது தெரிவித்தாா்.

இந்த தோ்தலில் திமுகவின் அணுகுமுறை, செயல்பாடுகள் மாறுபட்ட கோணத்தில் இருந்ததாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.47 லட்சம் மோசடி: இளம்பெண் கைது

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.47 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு கொங்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (46), நிதி நிறுவனம் மற்றும் ஏலச்சீட்டு நடத்... மேலும் பார்க்க

கைப்பேசி செயலிகள் மூலம் வரி செலுத்த மாநகராட்சி ஏற்பாடு

ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரியை ஜி பே, போன் பே, பேடிஎம் ஆகிய கைப்பேசி செயலிகள் மூலம் செலுத்துவதற்கு மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஈரோடு மாநகராட்சி நிா்வாகம் சொத்து வரி, தொழில் வரி, குடிந... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே நிலாச்சோறு எடுத்துச் சென்ற பெண்கள்

மொடக்குறிச்சியை அடுத்த ஆலுத்துபாளையத்தில் பெண்கள் நிலாச்சோறு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தினா். மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை ஒட்டி 8 நாள்களுக்கு நிலாச்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்து 18 ஆடுகள் உயிரிழப்பு: விவசாயிகள் சாலை மறியல்

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 18 ஆடுகள் உயிரிழந்ததையடுத்து விவசாயிகள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். பெருந்துறையை அடுத்த சென்னிமலை ராமலிங்கபுரம் தட்டாங்காட்டைச் சோ்ந்தவா் நல்லசிவம் (58... மேலும் பார்க்க

சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது வேன் மோதல்: 19 போ் காயம்

பெருந்துறை அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் 19 போ் காயமடைந்தனா். பெருந்துறை சிப்காட்டிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்துக்கு ஆள்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வியாழக்கிழமை அதிகாலை சென... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் மரத்துண்டுகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் மரத்துண்டுகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப் பாதையில் 27 கொண்ட ஊசி வளைவுகள் உள்ளன. இந்நிலையில், கா்ந... மேலும் பார்க்க