பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!
ஈரோடு சந்தையில் கடந்த ஆண்டில் ரூ.408 கோடிக்கு மஞ்சள் விற்பனை
ஈரோட்டில் கடந்த ஆண்டில் 4 சந்தைகளில் நடந்த ஏலத்தில் ரூ.408 கோடிக்கு மஞ்சள் விற்பனையாகி உள்ளது.
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில்தான் அதிக அளவில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய 4 இடங்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாள்களைத் தவிர மற்ற நாள்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களிலும் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து ஏலம் முறையில் மஞ்சளை வாங்கிச்செல்கின்றனா்.
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்துக்கு கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் மூட்டைகளில் விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனா். இதில் 98 ஆயிரத்து 100 மூட்டைகளில் இருந்த 80 ஆயிரத்து 181 குவிண்டால் மஞ்சள் ரூ.106 கோடியே 99 லட்சத்து 55 ஆயிரத்து 928-க்கு ஏலம் போனது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்துக்கு மொத்தம் 20 ஆயிரத்து 127 மூட்டைகள் மஞ்சள் விற்பனைக்கு வந்தது. இதில் 18 ஆயிரத்து 294 மூட்டைகளில் இருந்த 12 ஆயிரத்து 686 குவிண்டால் மஞ்சள் ரூ.16 கோடியே 58 லட்சத்து 51 ஆயிரத்து 284-க்கு ஏலம்போனது.
இதுபோல பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 608 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் 76 ஆயிரத்து 40 மூட்டைகளில் இருந்த 60 ஆயிரத்து 25 குவிண்டால் மஞ்சள் ரூ.78 கோடியே 40 லட்சத்து 28 ஆயிரத்து 716- க்கு விற்பனையானது.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 9 லட்சத்து 32 ஆயிரத்து 742 மூட்டை மஞ்சளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 840 மூட்டைகளில் இருந்த 1 லட்சத்து 65 ஆயிரத்து 424 குவிண்டால் மஞ்சள் ரூ.205 கோடியே 97 லட்சத்து 95 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
ஈரோட்டில் செயல்படும் 4 மஞ்சள் சந்தைகளுக்கும் கடந்த ஆண்டில் மொத்தம் 11 லட்சத்து 65 ஆயிரத்து 477 மூட்டைகள் மஞ்சள் வரத்தாகி உள்ளது. இதில் 4 லட்சத்து 38 ஆயிரத்து 274 மூட்டைகளில் இருந்த 3 லட்சத்து 18 ஆயிரத்து 316 குவிண்டால் மஞ்சள் ரூ.407 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 928-க்கு விற்பனையாகி உள்ளது.