ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ...
ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலைக் கல்லூரியில் நாளை தொடக்கம்
பொது நூலகத் துறை, மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது:
அறிவு, கல்வி மற்றும் சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் ஈரோட்டில் 2005-ஆம் ஆண்டு முதன்முதலாக ஈரோடு புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு 21-ஆம் ஆண்டை எட்டியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசின் பொது நூலகத் துறையுடன் இணைந்து இந்த ஈரோடு புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 2025-ஆம் ஆண்டுக்கான ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த முறை ஏறத்தாழ 250 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
இதில் முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில புத்தக பதிப்பகங்கள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் அரங்குகள் அடங்கும். இந்த புத்தகத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 7 மணிக்கு தொடங்கும். இதில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று புத்தக அரங்கை திறந்துவைக்கிறாா். இந்த புத்தகத் திருவிழா தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெறும். நுழைவுக் கட்டணம் இல்லை, அனுமதி இலவசம். தினமும் மாலை சிந்தனை அரங்கில் பிரபல பேச்சாளா்களின் கருத்தாழம் மிக்க சொற்பொழிவுகள் நடைபெறும்.
இங்கு அமைக்கப்படும் உலகத் தமிழா் படைப்பரங்கம் இந்த ஆண்டு மேலும் விரிவுபடுத்தப்படும். இம்முறை சிங்கப்பூா் மற்றும் அமெரிக்காவில் உள்ள தமிழ் எழுத்தாளா்களின் நூல்கள் அனைத்தும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவின்போது புதிய புத்தகங்களின் வெளியீடு நிகழ்ச்சி அதற்கான பிரத்யேக அரங்கில் நடத்தப்படும்.
சிறந்த இளம் விஞ்ஞானி ஒருவரை தோ்வு செய்து அவருக்கு சிங்கப்பூா் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அடங்கிய ஜி.டி.நாயுடு விருது ஆண்டுதோறும் ஈரோடு புத்தகத் திருவிழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் இளம் விஞ்ஞானி ஒருவருக்கு வரும் 5-ஆம் தேதி மாலை விழா மேடையில் பேரவையின் சாா்பில் இவ்விருதை விஐடி பல்கலைக்கழக வேந்தா் ஜி.விஸ்வநாதன் வழங்குகிறாா். இவை தவிர பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் என்றாா்.