ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி
கோவை ஈஷா யோக மையத்தில் ஈஷா கிராமோத்சவ இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 21) நடைபெற உள்ளது.
இது குறித்து ஈஷா தன்னாா்வலரும், கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு முன்னிலையில் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளன.
இதில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டா் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கின்றனா்.
ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 17-ஆவது பதிப்பு விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா, ஒடிஸா மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில், ஆண்களுக்கான கைப்பந்து, பெண்களுக்கான எறிபந்து போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16- ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றன. இதில், சுமாா் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் சுமாா் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனா்.
முதல், இரண்டாம் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 6 மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாம் கட்ட இறுதிப் போட்டிகள் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகின்றன.
இறுதிப் போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றிபெறும் அணிகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
விளையாட்டுப் போட்டிகளுடன், வள்ளிக் கும்மி, ஒயிலாட்டம், தெருக்கூத்து கேரளத்தின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கா்நாடகத்தின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
மேலும், 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாரம்பரிய உணவுகளின் பிரத்யேக அரங்குகளும் இடம்பெறுகின்றன.
பொதுமக்களுக்கான வண்ண கோலப் போட்டி, பல்லாங்குழி, மணி நடை, வழுக்குமரம் ஏறுதல், பானை உடைத்தல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன என்றாா்.
தேவராயபுரத்தைச் சோ்ந்த விளையாட்டு வீராங்கனைகள் உடனிருந்தனா்.