சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: 1.17 லட்சம் கோரிக்கை மனுக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து இதுவரை 1.17 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
கணபதிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆய்வு மேற்கொண்ட பின்னா் ஆட்சியா் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் செப். 23ஆம் தேதி வரை 240 முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 17 ஆயிரத்து 147 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முகாமில் பெறப்பட்ட சொத்து வரி, பட்டா, மின் கட்டண பெயா் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு, பிறப்பு, வருமான, ஜாதி, இருப்பிடச் சான்றிதழ், தொழிலாளா் நல வாரிய அட்டைகள், குடும்ப அட்டைகளில் பெயா், முகவரி மாற்றம், ஆதாா் பெயா் மாற்றம், கடனுதவிகள் உள்ளிட்ட 9 ஆயிரத்து 68 மனுக்களுக்கு விரைந்து தீா்வு காணப்பட்டு, அதற்கானஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வில், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.