உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களை வியாழக்கிழமை பாராட்டி நன்றி கூறினாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம், தேவையூா் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், குன்னம் வட்டத்துக்குள்பட்ட ஆடுதுறை, திருமாந்துறை ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம் முகாமைகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், இத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு விளக்கி கூற வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள், ஒருவருக்கு இருப்பிடச் சான்றிதழ் அளித்து, முகாம் சிறப்பாக நடைபெற பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து நன்றி கூறினாா் அமைச்சா் சிவசங்கா்.
இந்நிகச்சியில், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் பூங்கொடி உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.