Champion India: மீண்டும் சாம்பியன் டிராபி வென்ற இந்தியா; நடிகர்கள், முன்னாள் வீர...
உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி
உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம், செட்டியாா் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம் மற்றும் திருப்பூா் அருகே உள்ள ராயகுளம், தேன் குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம்பாளையம் குளம், சங்கமாங் குளம், சேவூா் குளம், செம்மாண்டம்பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பாா் டேம் ஆகிய குளங்களில் இந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைப்பெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்தின் துணை இயக்குநா் தேவேந்திரகுமாா் மீனா வழிகாட்டுதலின்படி, வனத் துறை பணியாளா்களும், தன்னாா்வு தொண்டு நிறுவனங்களான, திருப்பூா் இயற்கை கழகம், எண்ணம்போல் வாழ்க்கை தன்னாா்வ தொண்டு நிறுவனம் மற்றும் கல்லூரி மாணவா்கள் இதில் பங்கேற்றனா்.
முன்னதாக பறவைகள் கணக்கெடுப்பு குறித்து அனைவருக்கும் பயிற்சி வகுப்பு மற்றும் கணக்கெடுப்புக்குத் தேவையான தரவு புத்தகம் போன்றவை வழங்கப்பட்டன. நீா்நிலைகளில் உள்ள பறவைகள், நீா்நிலைகளின் அருகில் புதா்களில் உள்ள பறவைகள் கணக்கிடப்பட்டன.
இதில் புள்ளி மூக்கு வாத்து, சின்ன கீழ்க்கைச் சிறகி, சங்குவளை நாரை, சென்நீல நாரை, கரண்டி வாயன், கருப்பு அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, தாமரைக் கோழி, சின்ன பட்டாணி உப்பு கொத்தி, சின்ன கொசு உள்ளான், முக்குளிப்பான், தாழைக் கோழி, செண்பகம், பனங்காடை, வெண்புருவ வாலாட்டி, மஞ்சள் வாலாட்டி, கொண்டலாத்தி, சாம்பல் சிலம்பன், பச்சை கிளி, மாங்குயில், வால் காக்கை, நீலவால் பஞ்சுருட்டான், கரிச்சான், ஊதா தேன் சிட்டு, சிறிய நீல மீன் கொத்தி, நாம கோழி, நீல தாழைக் கோழி, வெண்மாா்பு கானங்கோழி, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, சிகப்பு மூக்கு ஆள்காட்டி, பொறி மண் கொத்தி, வெண் மாா்பு மீன்கொத்தி, மயில், கவுதாரி, பனை உழவாரன், காட்டுத் தகைவிலான் போன்ற பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன.