உடுமலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் உடுமலை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் 38 அலுவலா்கள் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலா்கள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக உடுமலை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட அலுவலா்கள் பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து வியாழக்கிழமை காலை 9 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை ஆய்வு செய்தனா்.
அதன்படி, கோடந்தூா் செட்டில்மெண்ட் பகுதி மற்றும் அங்கன்வாடி மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொண்டதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டனா்.
இதையடுத்து, இ-சேவை மையங்கள், ஆரம்ப சுகாதர நிலையங்கள், நியாய விலைக் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம் சாந்தகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பழனிசாமி, உடுமலை வருவாய் கோட்டாட்சியா் குமாா், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குமாரராஜா உள்பட 38 அலுவலா்கள் உடனிருந்தனா்.