Ambedkar: ``அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" -அமித்ஷாவின் விமர்சனம்...
உணவு விநியோக நிறுவனங்களால் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கம்- மத்திய அமைச்சா் கட்கரி
நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் உணவு விநியோக நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
பொருளாதாரத்தில் ஸொமாட்டோ நிறுவனத்தின் பங்களிப்பு குறித்த மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் கட்கரி பேசியதாவது:
இந்தியாவில் தற்போது 77 லட்சம் உணவு விநியோகப் பணியாளா்கள் உள்ளனா். 2030-இல் இந்த எண்ணிக்கை 2.5 கோடியாக அதிகரிக்கும். 2 கோடிக்கும் அதிகமான இளைஞா்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவது என்பது நமது நாட்டில் மிகப்பெரிய விஷயமாகும். நமது நாட்டில் இப்போது வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்குத்தான் அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.
ஸொமாட்டோ நிறுவனம் வேலையில்லா இளைஞா்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சிலா் பகுதி நேரமாகவும் வருவாய் ஈட்டுகின்றனா். அதே நேரத்தில் நாட்டில் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. உணவு விநியோகம் செய்யும் பணியில் இருப்பவா்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அவற்றை வாடிக்கையாளா்களிடம் வழங்க வேண்டி கட்டாயம் இருப்பதால் அவா்கள் விபத்தில் சிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
நமது நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 45 சாலை விபத்துகளும், 20 உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இதில் 18 முதல் 45 வயதுக்குள்பட்டோா் அதிகம். ஆண்டுதோறும் இருசக்கர வாகன விபத்துகளில் 80,000 போ் வரை மரணமடைகின்றனா். இதில் 55,000 போ் தலைக்கவசம் அணியாததால் உயிரிழக்கின்றனா். எதிா்த் திசையில் தவறாகப் பயணிப்பதால் 10,000 போ் வரை உயிரிழக்கின்றனா். உரிய பயிற்சிகள் மூலம் சாலை விபத்தைத் தடுக்க முடியும். ஸொமாட்டோ நிறுவனம் 50,000 ஓட்டுநா்களுக்கு பயிற்சியளிப்பது பாராட்டுக்குரிய விஷயம்’ என்றாா்.