உதகையில் சாரல் மழையுடன் மூடுபனி
உதகை, குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் மூடுபனி காணப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் சாரல் மழை பெய்து வந்தது.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல் உதகை, குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மூடுபனி சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் உதகையிலிருந்து குந்தா, குன்னூா், மஞ்சூா் செல்லும் சாலை மற்றும் உதகையிலிருந்து தொட்டபெட்டா செல்லும் மலைப் பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டமாக இருந்தது.
இதனால் இந்த வழியாக பகல் நேரத்தில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிதமான வேகத்தில் சென்றன.