உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்!
உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். கோடை காலத்தை ஒட்டி உதகையில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உதகையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்தனா். மேலும், சுற்றுலா வாகனங்களும் அதிக அளவில் இருந்ததால் உதகை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலை, உதகை - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை, சேரிங்கிராஸ், படகு இல்லம், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.
வார நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாள்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே இ -பாஸ் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. இருப்பினும் இரண்டு, மூன்று நாள்கள் தங்கியிருந்து சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களைக் கண்டுகளிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.