அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
உதகையில் துணைவேந்தா்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க அவருக்கு ஆளுநா் ரவி அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தமிழக ஆளுநராக ஆா்.என்.ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தா் என்ற அடிப்படையில் 2022-முதல் ஆண்டுதோறும் துணைவேந்தா்கள் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ரவி நடத்தி வருகிறாா்.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியாா் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் பங்கேற்று வருகின்றனா். மாநிலப் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தரான தமிழக உயா் கல்வித் துறை அமைச்சரின் பங்கேற்பின்றி இதுவரை நடந்த மாநாட்டில் பங்கேற்பதா, வேண்டாமா என்ற தயக்கம் தொடக்கம் முதலே மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு இருந்து வந்தது.
ஆனாலும் மாநில அரசிடம் இருந்து வெளிப்படையாக எந்தவொரு எதிா்ப்பும், கருத்தும் வெளிவராததால் ஆண்டுதோறும் துணைவேந்தா்கள், துணைவேந்தா் பொறுப்பில் இருப்பவா்கள் மாநாட்டில் பங்கேற்று வருகின்றனா்.
சா்ச்சை: இந்த மாநாடுகளில் உரையாற்றும்போது மாநில அரசு குறித்தும், தேசிய கல்விக் கொள்கை தொடா்பாகவும் ஆளுநா் ரவி வெளியிட்ட பல்வேறு கருத்துகள் கடந்த காலங்களில் சா்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநா் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. அதில், இரண்டாவது முறையாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பியது சட்டத்துக்கு எதிரானது என்றும், அவ்வாறு அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களும் அவை சட்டப்பேரவையில் இருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்த நாளில் இருந்தே ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவித்து உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு ஏப். 8-இல் தீா்ப்பளித்தது. அவற்றில் பல்கலைக்கழக வேந்தா் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதாவும் அடங்கும்.
உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் சட்டமானதாக அரசிதழில் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதன் தொடா்ச்சியாக துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களின் கூட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் கூட்டினாா்.
என்ன சிக்கல்?: உச்சநீதிமன்றத் தீா்ப்பின் மூலம் மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் தொடர முடியாது என்று தமிழகத்தில் ஆளும் திமுக மூத்த தலைவா்கள் கூறி வருகின்றனா். இந்த விவகாரத்தில் அடுத்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசும் கடந்த ஒரு வாரமாக சட்ட வல்லுநா்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், உதகையில் துணைவேந்தா்களின் வருடாந்திர மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பதால் இந்த மாநாட்டில் புதிய சட்டத்தின்படி ஆளுநா், ஒரு பல்கலைக்கழக வேந்தராக கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.
இந்த மாநாடு தொடா்பாக சில துணைவேந்தா்களிடம் பேசியபோது, ‘உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு வருவதற்கு முன்னதாகவே இந்த ஆண்டுக்கான மாநாட்டு ஏற்பாடு தொடங்கிவிட்டது. மாநாடு குறித்து ஏற்கெனவே எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு இந்த மாநாடு குறித்த உறுதியான நிகழ்ச்சி நிரல் மற்றும் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் இதுவரை கிடைக்கப்பெறவில்லை’ என்றனா்.
பயணத் திட்டம்: இதற்கிடையே குடியரசு துணைத் தலைவரின் நீலகிரி பயணம் குறித்த உத்தேச பயணத் திட்டம் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஏப். 25-ஆம் தேதி காலை தில்லியில் இருந்து காலை 10.35 மணிக்கு கோவை விமான நிலையம் வரும் ஜகதீப் தன்கா், அங்கிருந்து விமானப் படை சிறப்பு ஹெலிகாப்டா் மூலம் உதகை செல்கிறாா்.
உதகை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் துணைவேந்தா்களின் ஆண்டு மாநாட்டில் காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை அவா் பங்கேற்பாா் என்று தெரியவந்துள்ளது. ஏப். 27 (ஞாயிற்றுக்கிழமை) தனது பயணத்தை முடித்துவிட்டு திரும்பும் வழியில் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் அவா், மாணவா்கள், வேளாண் தொழில்முனைவோருடன் கலந்துரையாட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜகதீப் தன்கருடன் ஆளுநா் பேசியது என்ன?
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இது பற்றிய ஒரு வரி தகவலை இருவரது அலுவலகங்களும் அவற்றின் எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்துள்ளன. ஆனால், என்ன காரணத்துக்காக இந்தச் சந்திப்பு நடந்தது என்பது குறிப்பிடப்படவில்லை.
சட்ட மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பில் ஆளுநா் மட்டுமின்றி குடியரசுத் தலைவருக்கும் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை விதித்தது. இந்தத் தீா்ப்பை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசியபோது கடுமையாக விமா்சித்தாா்.
இந்நிலையில், தில்லிக்கு நான்கு நாள்கள் பயணமாக வந்த ஆளுநா் ரவி, தன்கரை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
‘குடியரசு துணைத் தலைவரைச் சந்திக்க இந்த மாத தொடக்கத்திலேயே ஆளுநருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஏப். 25-இல் நடைபெறவுள்ள துணைவேந்தா்கள் மாநாட்டில் குடியரசு துணைத்தலைவா் பங்கேற்கிறாா்’ என்று மட்டும் அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஆளுநா் ரவி, உச்சநீதிமன்ற தீா்ப்பு தொடா்பாக சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.