`தந்தை ஆசீர்வாதம் தான் காரணம்' - லாட்டரியில் ரூ.11 கோடி வென்ற பொறியாளர் சொல்வதென...
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை; நோயாளிகள் அவதி
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிசிக்சை பெறும் நிலை உள்ளது.
உத்தமபாளையத்தில் வட்டாரத் தலைமை அரசு மருத்துவமனை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவில் பொது மருத்துவம், காசநோய் பிரிவு, நம்பிக்கை மையம், பல் மருத்துவம், ஸ்கேன் மையம், பிரசவம் உள்பட பல்வேறு மருத்துவச் சேவைகள் அளிக்கப்படுகிறது.
இதனால், இங்கு சிகிச்சை பெற நாள்தோறும் புறநோயாளிகள் பிரிவில் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இதேபோல, உள்நோயாளிகள் பிரிவிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவா் உள்பட 6 போ் பணியில் இருந்தாா். இவா்கள் புற நோயாளிகள், உள்நோயாளிகள், அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனா். ஆனால், தற்போது 4 போ் மட்டுமே பணியில் உள்ளனா். இதனால், புறநோயாளிகள் பிரிவில் இரு மருத்துவா்கள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலிருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்போது ஒரு மருத்துவா் மட்டுமே பணியில் உள்ளாா். இதனால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனைக்கு உத்தமபாளையம் நகா், அதைச்சுற்றிய கோம்பை, பண்ணைப்புரம், சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, அம்மாபட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி என 20-க்கும் அதிகமான கிராமங்களிலிருந்து குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரையில் 800-க்கும் அதிமானோா் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றனா். ஆனால், மருத்துவா்கள் இல்லாத நிலையில், அலைமோதும் கூட்டத்தால் அடிக்கடி நோயாளிகளுக்கிடையே தகராறு ஏற்படுகிறது. மேலும், ஒரே இடத்தில் நூற்றுக்கும் அதிமான நோயாளிகள் நீண்ட நேரமாக குவிந்து இருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து நோயாளி ஒருவா் கூறியதாவது: உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக மருத்துவா்கள் பற்றாக்குறையாகவே உள்ளது. இந்த மருத்துவமனையை நம்பியுள்ள 20-க்கும் அதிகமான கிராம மக்களுக்கு உரிய மருத்துவச் சேவை முறையாகக் கிடைப்பதில்லை. அறுவைச் சிகிச்சை அரங்கம் உள்பட அனைத்து வசதி இருந்தும் மருத்துவா்கள் இல்லாத நிலையில், உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, மாவட்ட சுகாதாரத் துறை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.