உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்!
உத்தரகண்ட்டில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா என்கிற உயரமான எல்லைக் கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பனிச்சரிவில் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 16 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 41 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.
பத்ரிநாத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மானா கிராமம் 3,200 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய - திபெத் எல்லையில் உள்ள கடைசி கிராமமாகும்.
மானா கிராமம் முதல் மானா பாஸ் பகுதி வரையிலான 50 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்புறச் சாலைகள் அமைப்பில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக 57 பேரும் பணியாற்றி வந்தனர்.
இதையும் படிக்க | ஜம்முவில் கனமழை: பாறை உருண்டதில் தாய், மகன் பலி!
பனிப்பொழிவும் மழையும் தொடர்ந்து பெய்து வரும் மோசமான நிலையிலும் பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தொழிலாளர்கள் மீடப்படுவது குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசுகையில், “இதுவரை 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தவர்களின் உதவியில் மீட்புப் பணி நடைபெற்று வருகின்றது. பேரிடர் மேலாண்மைத் துறை உள்பட மொத்த நிர்வாகமும் விழிப்புடன் இருக்கின்றனர். சிக்கியுள்ள நபர்களை விரைவில் பாதுகாப்பாக மீட்க முயற்சித்து வருகிறோம்” என்றார்.
மோசமான வானிலை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.
சண்டிகரில் உள்ள பாதுகாப்புத் துறையின் புவி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (பிப். 27) விடுத்த எச்சரிக்கையில் சாமோலி, உத்தர்காசி, ருத்ரபிரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் 2,400 மீட்டருக்கு மேல் உயரமான இடங்களில் 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.