Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
உத்தரப்பிரதேசம்: "அண்ணனின் சிகிச்சைக்கு பணம் தேவை" - சொந்த வீட்டில் ரூ.30 லட்சம் திருடிய பெண்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மகாவிர்ஜி நகரில் வசித்து வருபவர் மியூஷ் மித்தல். துணி வியாபாரியான மித்தல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூஜா (32) என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 15ம் தேதி மித்தல் வீட்டில் இருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது.
இதையடுத்து மித்தல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வீட்டில் வந்து திருடியவர்கள் குறித்து தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''மித்தலும், பூஜாவும் சம்பவம் நடந்த அன்று மாலை 3.15 மணிக்கு ஷாப்பிங் சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு வந்துள்ளனர். அந்த நேரத்தில் திருட்டு நடந்துள்ளது. பூஜாவின் சகோதரர் ரவி மற்றும் ரவியின் மைத்துனர் தீபக் ஆகியோர் பூஜாவும், அவரது கணவரும் வெளியில் சென்ற நேரத்தில் இத்திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்து விசாரித்தபோது பூஜாதான் இத்திருட்டுக்கு திட்டம் தீட்டிக்கொடுத்தது வந்துள்ளார்.
இதையடுத்து பூஜா, அவரது தாயார் அனிதா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பூஜாவின் சகோதரர் ரவிக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சையளிக்க அதிக பணம் தேவைப்படும் என்பதால் குடும்பமே சேர்ந்து இத்திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. திருடிய அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தனர்.