வஃக்ப் திருத்தச் சட்டம்: "விஜய் தலைமையில் மனு, மகத்தான வெற்றி" - தவெக அறிக்கை!
உத்தரப்பிரதேசம்: சாப்பாடு எனக் கருதி பணக்கட்டை எடுத்த குரங்கு; பணத்தில் நனைந்த மக்கள்; என்ன நடந்தது?
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாஹா என்ற நகரத்தில் சாமி சிலைகள் போன்ற ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருபவர் பால்கோபால். இவர் தனது கடையில் வசூலான பணத்தை எண்ணி ஒரு பண்டலாகக் கட்டி வைத்துவிட்டு, மற்ற வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அவரது கடைக்கு அருகில் மரம் ஒன்று இருக்கிறது. அம்மரத்தில் குரங்குகள் விளையாடுவதுண்டு. பால்கோபால் தனது வேலையில் பிஸியாக இருந்தபோது திடீரென கடைக்குள் நுழைந்த குரங்கு, பணம் கட்டி வைக்கப்பட்டு இருந்த பண்டலைக் கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிக்கொண்டு மரத்தின் கிளைக்குச் சென்றுவிட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த கோபால் குரங்கை விரட்டிச்சென்றார். ஆனால் குரங்கு மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு பணம் இருந்த பண்டலில் சாப்பிட எதாவது இருக்கும் என்ற ஆசையில் பிரிந்தது.

ஆனால் அது எதிர்பார்த்த சாப்பாடு இல்லை. உள்ளே இருந்த பணம் அப்படியே காற்றில் பறக்க ஆரம்பித்தது. அவைப் பறந்து சாலையில் பணமழையாகப் பொழிந்தது. அந்த வழியாக வந்த மக்கள் காற்றில் பணம் பறந்து வந்ததைக் கண்டு அவற்றை ஓடி ஓடி பிடித்தனர்.
கோபால் அங்குப் பணத்தை எடுத்தவர்களிடம், பணத்தை எடுக்காதீர்கள், எனது பணம் என்று எவ்வளவோ கெஞ்சியும் யாரும் கேட்பதாக இல்லை. ஒவ்வொருவரும் கையில் கிடைத்த பணத்தை எடுத்துச்சென்றனர். கோபாலும் வேறு வழியில்லமல் ஓடி ஓடி பணத்தைப் பொறுக்கினார்.
பணத்தை எடுத்தவர்களிடம் பணம் என்னுடையது என்று சொன்னார். ஆனால் யாரும் எடுத்த பணத்தைக் கொடுக்க மறுத்து கொண்டு சென்று விட்டனர். கோபால் போராடி ரூ.6000ஐ மட்டும் மீட்டார். எஞ்சிய பணத்தை வழிப்போக்கர்கள் எடுத்துச்சென்றுவிட்டனர். பண்டலில் 10,800 ரூபாயைத் தான் கட்டி வைத்திருந்ததாக கோபால் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''பணத்தை எடுக்காதீர்கள் என்று எவ்வளவோ கெஞ்சினேன். ஆனால் யாரும் கேட்கவில்லை. யாரும் எடுத்த பணத்தையும் கொடுக்கவில்லை. நான் சொல்வதைக் கேட்காமல் குரங்கு தூக்கிப்போட்ட பணத்தை எடுப்பதில்தான் அவர்கள் ஆர்வமாக இருந்தனர். இதனால் எனது ரூ.4800 பறிபோய்விட்டது'' என்றார்.

கடை இருந்த இடம் மார்க்கெட் பகுதியாகும். எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மார்க்கெட்டில் திடீரென பணமழை பொழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பும் இதே உத்தரப்பிரதேசத்தில் குரங்கு ஒன்று ரூ.80 ஆயிரத்தைத் தூக்கிச்சென்று பணமழையாகப் பெய்யவைத்தது.