Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
`உன் கணவனை நக்சலைட் பகுதிக்கு மாற்றிவிடுவேன்’ - எஸ்.ஐ மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த IPS அதிகாரி?
சத்தீஷ்கர் மாநிலத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி ஐ.பி.எஸ் அதிகாரி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஷ்கரில் உள்ள ராய்ப்பூர் அருகில் உள்ள சந்த்குரி என்ற இடத்தில் இருக்கும் போலீஸ் அகாடமியில் இயக்குநராக இருப்பவர் ஐ.பி.எஸ் அதிகாரி ரத்தன்லால் டாங்கி. இவர் மீது பிலாஸ்பூரில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் போலீஸ் அதிகாரியின் மனைவி பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்து இருக்கிறார்.
அப்பெண்ணிற்கு கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரத்தன்லாலுடன் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். இத்தொடர்பு மூலம் ரத்தன்லால் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயன்றார் என்பது புகார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரத்தன்லால் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அப்பெண் மாநில டிஜிபியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் செய்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில், ''ரத்தன் லால் கோரிக்கைக்கு இணங்கவில்லையெனில் எனது கணவரை நக்சலைட்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு மாற்றிவிடுவேன் என்று மிரட்டினார். அடிக்கடி வீடியோ காலில் இருக்கும்படி கட்டாயப்படுத்துவார். அவரது மனைவி இல்லாத நேரத்தில் என்னை அவரது பங்களாவிற்கு அழைப்பார். அங்கு என்னிடம் அநாகரீகமாக நடந்து கொள்வார். நான் அவரிடமிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றால் மிரட்டுவார். அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்.
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பைனான்சியல் ரீதியாகவும் கடந்த பல ஆண்டுகளாக துன்புறுத்தி வருகிறார்’ என அப்புகாரில் தெரிவித்துள்ளார்.
இதே போன்று ரத்தன்லால் டாங்கேயும் அப்பெண் மீது மாநில டிஜிபி அலுவலகத்தில் புகார்கொடுத்து விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அப்பெண் தன்னை மிரட்டி பல ஆண்டுகளாக பணம் பறித்து வந்ததாக கூரியுள்ளார். `தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அதற்கு நான் தான் காரணம் என்று எழுதி வைப்பேன் என்றும் கூறி மிரட்டி பணம் பறித்தார். எனது மனைவியின் புகைப்படங்களை வெளியிடுவேன் என்றும், மனைவியிடமிருந்து நான் விலகவேண்டும் என்றும் மிரட்டினார்.
எனது மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ளகூடாது என்றும், இரவு 10 மணிக்கு மேல் வீட்டு மாடியில் படுக்கவேண்டும் என்றும், லொகேசன் ஷேர் செய்யவேண்டும் என்றும், இரவில் விளக்கு போட்டு அருகில் யாரும் இல்லை என்பதை வீடியோ காலில் காட்டவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வார். அதிகாலை வரை வீடியோ காலில் இருப்பார். பாத்ரூம் சென்றால் கூட வீடியோ காலில் இருக்கவேண்டும் என்று கூறுவார். அதோடு ஒரு முறை விஷத்துடன் எனது அலுவலகத்திற்கு வந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்’ என்றும் ரத்தன் லால் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்து வந்திருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இப்போது திடீரென இருவரும் ஏன் புகார் செய்ய வந்தனர் என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருவரும் புகார் கொடுத்து இருப்பதால் இது குறித்து விசாரிக்க இரண்டு பேர் கொண்ட விசாரணை கமிஷனை நியமித்து மாநில டிஜிபி உத்தரவிட்டு இருக்கிறார். போலீஸ் அதிகாரிகள் ஆனந்த் சாப்ரா மற்றும் மிலிந்த் குரே ஆகியோர் விசாரணை கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் வாக்குமூலம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

















