உபி: காதலியைக் கொன்று உடலுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்; யமுனையில் தேடும் போலீஸ்! - என்ன நடந்தது?
உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் காவல்துறையினர் 20 வயது பெண் கொலை வழக்கில் 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். அகன்ஷா என்ற அந்த 22 வயது பெண்ணின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு யமுனா நதியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியான சுராஜ் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்துள்ளார். இவரது நண்பர் ஆஷிஷ் கொலை செய்தபிறகு உடலை மறைக்க உதவியிருக்கிறார். கான்பூரில் உள்ள ஹனுமத் விஹார் என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு ஆண்டுக்கு முன்பு அகன்ஷாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகியிருக்கிறார் சுராஜ். ஹனுமத் விஹாரில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் அவருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
சில நாட்களில் தான் வந்து செல்வதற்கு ஏதுவாக அகன்ஷாவுக்கு ஒரு வீடும் பார்த்துக்கொடுத்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் அகன்ஷாவின் குடும்பத்தினருக்கும் தெரிந்துள்ளது.
காவல்துறையினர் கூறுவதன்படி, சுராஜுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அகன்ஷாவுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அகன்ஷாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் சுராஜ்.
பின்னர் கொலையை மறைக்க அவரது நண்பர் ஆஷிஷின் உதவியை நாடியிருக்கிறார். இருவரும் அகன்ஷாவின் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து யமுனாவில் மூழ்கடிக்க அனுப்பியுள்ளனர். அதற்கு முன்னர் சூட்கேசுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால் அந்த புகைப்படம் சந்தேகத்தை எழுப்பவில்லை.
ஜூலை 22ம் தேதி அகன்ஷா காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் தேடியிருக்கின்றனர். பார்ரா புறக்காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் வரையிலும் தேடியுள்ளனர். ஆகஸ்ட் 8ம் தேதி அகன்ஷா காணாமல் போனதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்சம்பர் 16ம் தேதி அகன்ஷாவின் அம்மா விஜயாஶ்ரீ சுராஜ் மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு சுராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொபைல் இருப்பிடத் தரவுகள், கால் ரெகார்டிங்ஸ் அடிப்படையிலான விசாரணையிலும் சுராஜ் கொலை செய்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சுராஜ் காவல்துறையை திசை திருப்புவதற்காக அகன்ஷாவின் மொபைலை பீகார் செல்லும் ரயிலில் அனுப்பியிருக்கிறார்.
சுராஜ் மொபைலில் இருந்த புகைப்படங்கள் அடிப்படையில் அக்ன்ஷாவின் உடலைத்தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.