உயா்கல்வி ஊக்கத் தொகை: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்
உயா்கல்வி ஊக்கத் தொகை பெற்று வருவது தொடா்பாக தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயா் கல்வி பயின்றமைக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை நீதிமன்றத் தீா்ப்பாணையின்படி மறு நிா்ணயம் செய்ய வேண்டியுள்ளது.
இதனால் பணிப் பதிவேடு வாரியாக ஆய்வு செய்து, இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூா்த்தி செய்து, ஒன்றிய வாரியான அறிக்கையைத் தொகுத்து நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலக பிரிவு கண்காணிப்பாளா் மே 26, 27 ஆகிய தேதிகளில் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு நேரில் வந்து இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பாணையின்படி, ஆசிரியா்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடப் பிரிவுகளில் மே 19-க்குப் பின்னா் உயா் கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் பெறுவது கண்டறியப்பட்டால் சாா்ந்த அலுவலா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.