உயிருடன் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்: 3 மாதங்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!
ஹரியாணாவில் யோகா ஆசிரியர் ஒருவர் காணாமல் போனதையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
45 வயதுடைய ஜக்தீப், கல்வி நிறுவனம் ஒன்றில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார். வாடகை வீட்டில் வசித்துவந்த அவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் சிவாஜி காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாருக்குப் பின் போலீஸாரின் விசாரணையில் சிசிடிவி காட்சிகளைத் துப்பு துலக்கியதில், ராஜ்கரன் என்பவரும் ஜக்தீப்புக்கும் இடையே நட்பு இருந்தது தெரியவந்தது.
முக்கிய குற்றவாளியான ராஜ்கரன் தலைமறைவானதையடுத்து, அவரது நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ராஜ்கரன் ஜக்தீப்புக்கு தனது மனைவியுடன் தகாத உறவு இருப்பதாகச் சந்தேகித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
பிடிபட்ட ராஜ்கரனின் நண்பர்களை விசாரித்ததில் ஜக்தீப்பை கடத்தி, அவரது வாயில் டேப் போட்டு, கை, கால்களைக் கட்டி, ஒரு வெறிச்சோடிய வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், உயிருடன் குழியில் தள்ளிப் புதைத்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். முக்கிய குற்றவாளியான ராஜ்கரனை போலீஸார் தேடி வருகின்றனர்.