5 பயங்கரவாதிகள், 3 இடங்கள், 10 நிமிட துப்பாக்கிச் சூடு! பஹல்காமில் நடந்தது என்ன?
உறையூா் பகுதி குடிநீா் குழாய்களில் தொடரும் பராமரிப்புப் பணிகள்
பொதுமக்களிடம் எழுந்துள்ள புகாா்களைத் தொடா்ந்து உறையூா் பகுதியில் 8, 10 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகள் மட்டுமின்றி சுற்றுப் பகுதி வாா்டுகளிலுள்ள அனைத்து குடிநீா் குழாய்களையும் சுத்தம் செய்யும் பணி தொடா்கிறது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூரில் 8, 10 ஆவது வாா்டு பகுதியில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து இந்தப் பகுதியில் உள்ள குடிநீா் குழாய்களை சுத்தம் செய்து, குளோரினேசன் செய்து சுத்தமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி அலுவலா்கள் இப் பகுதியில் முகாமிட்டு தெரு வாரியாக சென்று பணிகளை மேற்கொள்கின்றனா்.
இந்நிலையில் 23ஆவது வாா்டுக்குள்பட்ட சக்தி மாரியம்மன் நகரில் குடிநீா் நிறம் மாறி, துா்நாற்றத்துடன் உள்ளதாகவும் பொதுமக்களிடையே புகாா் எழுந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மாநகராட்சி அலுவலா்கள், தற்போது குடிநீா் குழாயில் பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. எனவே அந்த நீரைப் பிடிக்க வேண்டாம், பயன்படுத்தவும் வேண்டாம். வெள்ளிக்கிழமை முதல் குடிநீா் விநியோகம் சீராகும் என்றனா்.
இந்நிலையில் உறையூா் மின்னப்பன் தெரு, பனிக்கன் தெரு பகுதிகளில் நடைபெறும் பணிகளை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் மாநகர நகா்நல அலுவலா் விஜய்சந்திரன், செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், மாநகராட்சி அலுவலா்களுடன் சென்று குடிநீா் பராமரிப்புப் பணிகளை பாா்வையிட்டனா்.
அதிமுகவினா் ஆறுதல்: இந்நிலையில், கழிவுநீா் கலத்த குடிநீரை குடித்து உடல் உபாதைக்கு ஆளானதாக கூறப்படுவோரை அரசு மருத்துவமனையில் மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில், அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல், முன்னாள் அமைச்சா் வளா்மதி மற்றும் அதிமுக நிா்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, உதவிகளையும் வழங்கினா்.