ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.
உலக மக்கள் தொகை 1987-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி 500 கோடியை தாண்டியது என்ற அபாயத்தை உலக மக்களுக்கு உணா்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அந்த நாளை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. இதையடுத்து, ஆண்டுதோறும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, ‘ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப் பேறு திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம்’ என்ற மையக்கருத்துடன் விஏடி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் எல்ஆா்ஜி கல்லுாரியைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இதில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் இளவயது திருமணம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்றோா் ஏந்திச் சென்றனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி தென்னம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் நிறைவடைந்தது.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மீரா, மாவட்ட சுகாதார அலுவலா் ஜெயந்தி, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பத்மினி, குடும்ப நலத் துறை துணை இயக்குநா் கௌரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.