ஊட்டிக்குள் முதல் முறையாக நுழைந்த யானை; குழப்பத்தில் தடுமாறும் வனத்துறை! - என்ன நடக்கிறது?
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். வளர்ச்சி என்கிற பெயரில் அரசு மற்றும் தனியார் தரப்பில் 200 ஆண்டுகளாக நீலகிரியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முறையற்ற பணிகளால் யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன. யானைகளின் வலைப் பாதைகளில் ஏற்பட்டிருக்கும் இந்த சிதைவு காரணமாக உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்ற

அடிப்படை காரணங்களுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடும்பத்தை அழைத்துச் செல்வது என்பது அவற்றிற்கு பெரும் போராட்டமாக மாறியிருக்கிறது. வலசைப்பாதையை இழந்து தடுமாறும் யானைகள் அளவுக்கு அதிகமான ஒலி , ஒளியால் துன்புறுத்தப்படுவதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் .
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலைச்சரிவு பகுதியில் அமைந்துள்ள பர்லியார் வனப்பகுதியில் இருந்து வழிதவறிய இளம் ஆண் யானை ஒன்று குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் நடமாடி வருகிறது. அந்த யானையை மீண்டும் பர்லியார் வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கும் பணியில் வனத்துறையினர் ஒரு வாரமாக போராடி வந்த நிலையில், அந்த யானை ஊட்டிக்கு அருகில் உள்ள தொட்டபெட்டா மலை அடிவாரமான கோடப்ப மந்து பகுதிக்கு சென்றடைந்திருக்கிறது.

கடந்த 200 ஆண்டுக்கால ஊட்டி வரலாற்றில் முதல் முறையாக யானையைக் கண்ட மக்கள் மட்டுமின்றி வனத்துறையும் குழப்பத்தில் தடுமாறி வருகிறது.
தொட்டபெட்டா வனத்தில் தஞ்சமடைந்திருக்கும் அந்த யானையை மீண்டும் அதன் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஒட்டுமொத்த வனத்துறையும் ஈடுபட்டு வருகின்றது. தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் தொட்டபெட்டா காட்சி முனையும் மூடப்பட்டுள்ளது.
பர்லியார் பகுதியில் காட்டு மரங்களை வெட்டுவதற்கும் பொக்லைன் ரக இயந்திரங்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த காரணத்தாலேயே தற்போது ஊட்டிக்குள் யானைகள் நுழைந்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த நீலகிரி கோட்ட வனத்துறையினர், " வழிதவறிய இந்த இளம் ஆண் யானை குன்னூர் அருகில் உள்ள கரிமரா பகுதியில் இருந்தது. அங்கிருந்து விரட்ட முயற்சி செய்த போது தனியார் தேயிலை தோட்டங்களைக் கடந்து நேற்றிரவு ஊட்டிக்கே வந்துவிட்டது. மக்களுக்கு இடையூறின்றி இந்த யானையை மீண்டும் பர்லியார் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஐம்பதுக்கும் அதிகமான வனத்துறையினர் களத்தில் உள்ளனர். பர்லியார் பகுதியில் யானைகளுக்கு இடையூறு ஏற்பட்டிருந்தால் அது குறித்தும் ஆய்வு செய்யப்படும் " என்றனர்.