கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
ஊட்டி: மசூதி திறப்பு விழாவிற்கு முருகன் கோயில் சார்பாகச் சீர்வரிசை... நெகிழ வைத்த பந்தலூர் மக்கள்!
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகில் உள்ள உப்பட்டி பகுதியில் அமைந்திருக்கிறது ஜும்மா மசூதி. நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத் தலமாக இருக்கும் அந்த மசூதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று (பிப்ரவரி 25) திறப்பு விழா நடைபெற்றது.
மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் உப்பட்டி செந்தூர் முருகன் கோயில் சார்பில் ஜும்மா மசூதி திறப்பு விழாவிற்கு மத நல்லிணக்க ஊர்வலம் மற்றும் சீர்வரிசை வழங்க ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து உப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் செந்தூர் முருகன் கோயில் கமிட்டியினர் பழங்கள், வெற்றிலை, பாக்கு, பரிசுப் பொருட்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றைத் தட்டுகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஜூம்மா மசூதியில் வழங்கியதுடன் பரஸ்பரம் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மத நல்லிணக்கத்தை உறுதி செய்திருக்கும் இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து தெரிவித்த உப்பட்டி கிராம மக்கள், "மத வேற்றுமைகளைக் கடந்து அனைத்து மக்களும் இந்த பகுதியில் பல ஆண்டுக்காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.

சிறிய சச்சரவும் இன்றி சகோதரர்கள் போல இருந்து வருகிறோம். இதன் வெளிப்பாடாகவே தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel