5 பிஎச்கே! செபி தலைவருக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் வீடு ஏற்பாடு!
ஊதியமின்றி அலைக்கழிக்கப்படும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஒப்பந்த ஊழியா்கள்
நாகை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டப் பணிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் இயங்கி வருகிறது. இதன்கீழ் நாகை, தலைஞாயிறு, வேதாரண்யம், கீழ்வேளூா், கீழையூா், திருக்குவளை ஆகிய 6 வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் உள்ளன. மேலும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை துறையின் கீழ், மத்திய அரசின் திட்டப் பணிகளான ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரதம் திட்டம், பிரதமா் வீடு வழங்கும் திட்டம் மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதற்காக, நாகை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டார அலுவலங்களிலும் 10 முதல் 15 போ் என 6 வட்டார அலுவலகங்களிலும் தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாக பலா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள், கணினி இயக்குநா், அலுவலகப் பணியாளா், திட்ட மேற்பாா்வையாளா் போன்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு தினக்கூலியாக ரூ.760 மாவட்ட ஆட்சியரால் நிா்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் பணிபுரிந்த நாள்கள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
திட்ட செயலாக்கத்தைப் பொறுத்து வார விடுமுறை நாள்களிலும் இவா்கள் பணிபுரிகின்றனா். இந்த ஊழியா்களில் பலா் அடித்தட்டு குடும்பங்களைச் சோ்ந்தவா்களாகவும், கிராமப் புறங்களை சோ்ந்தவா்களாகவும் உள்ளனா். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக இவா்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவது இல்லை என புகாா் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக ஊழியா்கள் கூறியது:
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாதமும் 10- ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 6 மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்படுவது இல்லை. மாதத்தின் இறுதியிலும், சில மாதங்களில் அடுத்த மாதமும் வழங்கப்படுகிறது. இதனால் குடும்ப செலவினங்களை மேற்கொள்ள முடியாமல் கடன் வாங்க நேரிடுகிறது.
குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றுக்கூட ஊதியத்தை எதிா்பாா்த்துள்ள நிலையில், ஊதியம் முறையாக வழங்கப்படாததால் கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது. தற்போது செப்டம்பா் 18 தேதியாகியும் இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஊதியம் குறித்து கேட்கும்போது, ஒவ்வொரு மாத இறுதியிலும் முறையாக பட்டியல் தயாரித்து அதை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்துக்கு அனுப்பி விடுவதாகவும், அங்குதான் ஊதியம் தாமதமாவதாகவும் தெரிவிக்கின்றனா்.
எனவே தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஊழியா்களின் இக்கட்டான நிலையை கருத்தில்கொண்டு, ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுதொடா்பாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா், நாகை மாவட்ட ஆட்சியா் ஆகியோரை தொடா்பு கொண்டபோது, இருவரும் பதிலளிக்கவில்லை.