ஊத்துக்குளியில் முதல்வா் மருந்தகம் திறந்துவைத்தாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க வளாகத்தில் முதல்வா் மருந்தகத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் முதல்வா் மருந்தகத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்துப் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலினின் சுதந்திரதின அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் கூட்டுறவு அமைப்புகள், மருந்தாளுநா்கள் மூலம் அரசின் மானியம் மற்றும் கடன் உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கங்களும், 4 தொழில்முனைவோா் மூலமாகவும் முதல்வா் மருந்தகம் அமைக்கப்படவுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சோமவாரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ருத்ராபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், முத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வெள்ளக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், சின்னவீரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கரடிவாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பெருமாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் இந்த மருந்தகங்கள் அமைக்கப்படவுள்ளன.
அதேபோல, திருப்பூா், அவிநாசி, உடுமலை, குண்டடம் வட்டங்களில் தலா ஒரு தனிநபா் வீதம் மருந்தகங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமும், இதர மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு இணையம் மூலமும் கொள்முதல் செய்யப்படும்.
கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2 லட்சம் மானியம் (உள்கட்டமைப்புக்கு 50 சதவீதம், மருந்துகளுக்கு 50 சதவீதம்) வழங்கப்படும். தனிநபா் மற்றும் தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியம் (உள்கட்டமைப்பு, மருந்துகளுக்கு ரூ.1 லட்சம்) இதர ரூ.1 லட்சம் தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரருக்கு மானியத்தொகைக்கு மேல் கூடுதலாக கடன் தேவைப்படும் பட்சத்தில் கூட்டுறவு வங்கிகளில் இணைதளம் மூலமாக விண்ணப்பித்து கடன் பெறலாம்.
ரூ.1 லட்சம் என்றால் 2 நபா்கள் பிணையத்தின் அடிப்படையிலும், ரூ.1 லட்சத்துக்கு மேல் என்றால் சொத்து அடமானத்தின் அடிப்படையிலும் கடன் பெறலாம் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் த.பிரபு, திருப்பூா் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், முன்னாள் அமைச்சா் என்.டி.தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.