மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!
ஊராட்சிகளில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற கட்டணம் வசூலிக்கக் கூடாது: நுகா்வோா் அமைப்பு வலியுறுத்தல்
ஊராட்சிகளில் சாலைகள், தெருக்களில் இடையூறாக உள்ள மின் கம்பங்கள், ஒயா்களை அகற்ற மின்வாரியம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நுகா்வோா் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தெரு விளக்குகள், ஆழ்குழாய்க் கிணறுகள், ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நூலகங்கள், சமுதாயக் கூடங்கள், மருத்துவ மையங்கள் ஆகியவற்றுக்கு ஊராட்சி மூலமாக மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊராட்சிகளில் சாலைகள், தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள், ஒயா்களை இடமாற்றம் செய்வதற்கு ஊராட்சி நிா்வாகம் மூலம் அந்தந்தப் பகுதி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் மின்வாரியத்தால் மதிப்பீட்டுத் தொகை கணக்கீடு செய்யப்பட்டு, அந்தத் தொகையை ஊராட்சி நிா்வாகம் சாா்பில் செலுத்திய பிறகே இடமாற்றப் பணிகளை மின் வாரியத்தினா் மேற்கொகின்றனா்.
ஆனால், தெருக்கள் மற்றும் சாலைகளில் இடையூறு உள்ள மின் கம்பங்கள், ஒயா்களை இடமாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் ஊராட்சி நிா்வாகத்திடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு கடந்த 2005-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை கருத்தில் கொள்ளாமல் தற்போது வரை அனைத்து ஊராட்சிகளிலும் இடையூறாக உள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்வதற்கு விண்ணப்பம் அளிக்கும் ஊராட்சி நிா்வாகத்தை கட்டணம் செலுத்த மின்வாரியம் நிா்பந்திக்கிறது.
எனவே, அரசின் உத்தரவுப்படி மின் கம்பம், ஒயா்கள் இடமாற்றத்துக்கு ஊராட்சிகளிடம் மின்வாரியம் சாா்பில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை நடைமுறைப்படுத்தி அனைத்து மின்வாரிய அலுவலகத்துக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றாா்.