எஃப்டிஐ விதிமுறைகள் மீறல்: பிபிசிக்கு ரூ.3.44 கோடி அபராதம்
அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) விதிமுறைகளை மீறியதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் இந்திய கிளைக்கு அமலாக்கத் துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மத்திய அரசு அனுமதியின் கீழ், டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும்.
இந்நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் ஊடகமாக செயல்படும் பிரிட்டனின் பிபிசி நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதமாக குறைக்கப்படாமல், 100 சதவீதமாகவே நீடித்தது.
இதைத்தொடா்ந்து அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தைப் பல வழிகளில் மீறியது குறித்து விளக்கம் அளிக்குமாறு பிபிசியின் இந்திய கிளை, அதன் மூன்று இயக்குநா்கள், நிதிப் பிரிவுத் தலைவா் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து விதிமீறல் தொடா்பாக அந்த செய்தி நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை ரூ.3,44,48,850 அபராதம் விதித்துள்ளது. இதுதவிர, அந்த நிறுவனத்தின் 3 இயக்குநா்களுக்கும் தலா ரூ.1.14 கோடிக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.