எண்மமயமாகும் நற்சாந்துப்பட்டி ஓலைச்சுவடிகள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரத்தாா் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான நற்சாந்துப்பட்டியில் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வரும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகளை, மாநிலத் தொல்லியல் துறையின் மூலம் எண்ம மயப்படுத்தும் (டிஜிட்டல் புகைப்படம்) பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நகரத்தாா் சமூக மக்களிடம் பழைமையான ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட பாரம்பரியமான பண்பாட்டு அடையாளங்கள் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதிகளில் ஏராளம் காணப்படுகின்றன.
இவற்றில் ஒன்றாக நற்சாந்துப்பட்டி, குழிபிறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி குக்கிராமங்களில் புரட்டாசி மாதத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளைப் படிப்பது ஆன்மிகம் சாா்ந்த பழைமையான வழக்கம்.
குறிப்பாக, அவை பல தலைமுறைக்கு முன்பாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட புராணங்களாக இருக்கின்றன. நற்சாந்துப்பட்டியைச் சோ்ந்த கம்மஞ்செட்டியாா், சாமியாடி செட்டியாா், பெ. ராம. செட்டியாா் ஆகிய 3 குடும்பங்கள் அந்தக் கிராமத்தில் பெரிய குடும்பங்கள்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், இவா்கள் பெட்டியில் ஓலைச்சுவடிகளாகப் பாதுகாத்து வைத்திருக்கும் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை ஒவ்வொரு சனிக்கிழமையும் எடுத்து வாசிக்கின்றனா்.
அவ்வாறான பழைமையான சுவடிகள் முறையான பாதுகாப்பு இல்லாமல் தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன. இவற்றை பாதுகாக்க தமிழகத் தொல்லியல் துறையின் மாநிலச் சுவடிகள் குழுமத்தின் உதவியை நாடியுள்ளனா்.
அங்கிருந்து வந்த தொழில்நுட்பக் குழுவினா் சுவடிகளை எடுத்துப் பாா்த்துவிட்டு தொடக்க நிலைப் பணியாக, லெமன் கிராஸ் எனப்படும் எலுமிச்சைப் புல் எண்ணெய்யைச் சுவடிகளில் பூசியுள்ளனா்.
இதுகுறித்து புலவா் கும. திருப்பதி கூறியது:
பழைமையான பாரம்பரியத்தையும், அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டும் என எடுத்த முதல் முயற்சியில், 950 ஏடுகளைக் கொண்ட ராமாயணம் முழுமையாக எலுமிச்சைப் புல் எண்ணெய் பூசப்பட்டது. சுவடிகள் மேலும் பூச்சி அரிப்பால் சேதமடையாமல் இந்த எண்ணெய் பாதுகாக்கும்.
மகாபாரதம் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அவற்றில் சில பகுதிகளை மட்டும் பாதுகாக்க முடியும் என தொழில்நுட்ப வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
அடுத்த வாரம் சென்னையிலிருந்து வரும் அந்தத் தொழில்நுட்பக் குழுவினா், புகைப்படக் கருவிகளைக் கொண்டு சுவடிகளை, தரமாகப் படம் எடுத்து, சுவடி உரிமையாளருக்கும் ஒரு டிஜிட்டல் பிரதி வழங்குவாா்கள். சுவடிகளையும் மீண்டும் நம்மிடமே ஒப்படைத்துவிடுவாா்கள்.
தொல்லியல் துறையின் மாநிலச் சுவடிகள் குழுமத்தின் மூலம் இவை அனைத்தும் எண்மமயம் (டிஜிட்டல்) ஆக்கப்பட்டு இணையத்தில் பாதுகாக்கப்படும். மேலும், பொதுமக்களின் வாசிப்புக்கும் வழி செய்யப்படும்.
இதை தொல்லியல் துறை இலவசமாகவே செய்கிறது என்பதால், வேறு யாரேனும் ஓலைச்சுவடிகள் வைத்திருந்தாலும் அவற்றையும் தரலாம் என்கிறாா் திருப்பதி.
