சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!
எதிரிகளின் தொல்லையா? மறைமுக சத்ருக்களை ஓட ஓட விரட்டி சக்கரத்தாழ்வாரின் அருளைத் தரும் அபரா ஏகாதசி
பெருமாளை வழிபட உகந்த திதிகளில் விசேஷமானது ஏகாதசி. ஒரு மாதத்தில் வரும் தேய்பிறை மற்றும் வளர்பிறை ஏகாதசியில் நாள் முழுவதும் விரதமிருந்து வழிபட்டால் பகவான் விஷ்ணுவின் திருவருள் கிடைப்பதோடு இவ்வுலக வாழ்வுக்குத் தேவையான சகல சம்பத்துகளும் கிடைக்கும் என்பர் பெரியோர்கள்.
வாழ்வில் நிம்மதியே அனைவரும் தேடும் செல்வம். பொருட்செல்வம் குறைவாக இருந்தால்கூட நிம்மதியாக வாழ்ந்துவிடலாம். ஆனால் எதிரி என்று ஒருவன் இருந்தால்கூட நம் நிம்மதி போய்விடும். எப்போது நமக்கு அவனால் ஆபத்து வருமோ என்கிற கவலை வாட்டும். சில நேரங்களில் நம் எதிரிகள் யார் என்பதே நமக்குத் தெரியாது. கூட இருப்பவரே குழி பறிப்பார். நம் முன்னேற்றங்களைத் தடை செய்வார். நம்மைத் தவறான பாதையில் நடத்திச் செல்வார். அப்படிப்பட்டவரை நாம் அடையாளம் காண்பது கடினம். எனவே நேர்முக எதிரிகளோ மறைமுக எதிரிகளோ யாராக இருந்தாலும் அது ஆபத்தே.

ஒரு புகழ்பெற்ற வாசகத்தைப் படித்திருப்போம். 'When God is for us, who can be against us'
கடவுள் நம்மோடு இருந்தால் யார் நமக்கு எதிராகச் செயல்பட முடியும் என்பதுதான் பொருள். காக்கும் கடவுள் விஷ்ணு. அவரை வழிபட்டால் அவர் நம்மைக் காப்பார் என்பதுவே ஞானநூல்கள் சொல்லும் உண்மை. விஷ்ணுவை நமக்கான பலமாக, படையாக காக்கும் சக்தியாக மாற்றிக்கொண்டால் நமக்குத் துன்பங்கள் நேராது.
உண்ணாவிரதம் - சில விதிவிலக்குகள்
அப்படி பெருமாளின் பேரருளைப் பெற்றுத் தரும் விரதமே ஏகாதசி விரதம். வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியே `அபரா ஏகாதசி' என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி திருமண் இட்டுப் பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கி ஆழ்வார்கள் பாடியருளிய சில தமிழ்ப் பாசுரங்களைப் பாடி வழிபட வேண்டும். பிறகு நாள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்கவேண்டும். பொதுவாக உணவுக் கட்டுப்பாடு என்பது அவரவர் உடல் நலனைப் பொறுத்தது. நோய் இருப்பவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், குழ்ந்தைகள் உணவு உண்ணாமல் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
சிலர் பலகாரம் சாப்பிடலாம் என்பார்கள். பல் என்றால் வடமொழியில் பழம் என்று பொருள். பல் + ஆகாரம் = பலகாரம் ஆயிற்று. பழங்களை மட்டுமே உணவாக உட்கொள்ளுதலையே அது குறிக்கும். ஆனால் இன்று பலகாரம் என்பது சிற்றுண்டிகளைக் (tiffen) குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. அரிசியை முழுமையாக சாதமாக சமைத்து சாப்பிடாமல் அதை உடைத்து உப்புமா போன்ற உணவுகளை சமைத்து சாப்பிடலாம் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் உண்ணா நோன்பு இருப்பது மிகவும் விசேஷம். அதிலும் அபரா ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். மரணபயம் விலகும். பூரண ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதை உணர்த்த ஏகாதசி புராணம் ஒரு சம்பவத்தைச் சொல்கிறது.

ஏகாதசி விரத திருக்கதை
அம்பரீசன் என்னும் மன்னன் பகவான் விஷ்ணுவின் பக்தன். முறையாக ஏகாதசி விரதம் இருப்பவன். ஒருமுறை அபரா ஏகாதசி அன்று விரதம் இருந்து விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி வழிபட்டான். விரதம் முடியும் தருவாயில் துர்வாச முனி அவன் அரண்மனைக்கு வந்தார். அம்பரீசன் உடனடியாக ஓடிச் சென்று அவரை வணங்கி வரவேற்றான். துர்வாசர் தான் நித்திய அனுஷ்டானங்களை முடித்துவருவதாகவும் பிறகு இருவரும் சேர்ந்து துவாதசி பாரனை செய்யலாம் என்றும் சொன்னார்.
பாரனை என்றால் விரதத்தை துளசி தீர்த்தம் சாப்பிட்டு முடித்தல் என்று பொருள். ஏகாதசி விரதம் முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் சரியான நேரத்தில் அதை முடித்து குறிப்பிட்ட நேரத்தில் பாரனை செய்துவிட வேண்டும் என்பது விதி. அப்படிச் செய்தால்தான் விரத பலன் முழுமையாகக் கிடைக்கும்.
துர்வாசரோ அனுஷ்டானங்கள் முடிக்கச் சென்ற இடத்தில் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அம்பரீசன் காத்திருந்து காத்திருந்து பாரனை முடியும் நேரம் நெருங்கிவிட்டதை அறிந்து கவலைப்பட்டான். விரதபலனைத் தெரிந்தே விடுவது பகவானின் விரத்தையும் அவர் சொன்ன நியதிகளையும் அவமதிப்பதாகும். எனவே அம்பரீசன் துர்வாச முனிவர் வருவதற்கு முன்பாகக் குறித்த நேரத்தில் பாரனையை முடித்தான்.
ஓடிவந்து காப்பார் சக்கரத்தாழ்வான்
இதைத் தன் ஞான திருஷ்டியில் அறிந்துகொண்டார் துர்வாசர். பாரனை என்பது உணவல்ல என்றாலும் அதுவே துவாதசி போஜனம் செய்யும் பலனைத் தருவது. தன்னுடன் சேர்ந்து பாரனை முடிக்க சம்மதித்துவிட்டு, இப்படி அவசரமாக பாரனையை முடித்த அம்பரீசன் மேல் கோபம் வந்தது. தன் தலை முடியில் ஒன்றைப் பிடிங்கிப் போட்டார். அது பூதமானது.
'போய் அம்பரீசனின் தலையைக் கொண்டுவந்து என் காலடியில் போடு' என்று அதற்குக் கட்டளையிட்டார். அம்பரீசனை நோக்கி அந்த பூதம் வந்தது. அம்பரீசனோ பகவானை வழிபட்டுக் கொண்டிருந்தான். கஜேந்திரன்போல் தன்னை அழைத்தால் பக்தர்களை ஓடிவந்து காப்பார் பெருமாள். ஆனால் அழைக்காமலேயே பெருமாளின் பக்தர்களைக் காக்க வருபவர் சக்கரத் தாழ்வார்.
அபரா ஏகாதசி விரதம் முடித்த அம்பரீசனைத் தாக்கவரும் பூதத்தை சக்கராயுதம் பாய்ந்து அழித்தது. அத்தோடு நில்லாமல் அதை ஏவிய துர்வாசரையும் துரத்தியது. இதைக் கண்ட துர்வாசர் அஞ்சி நடுங்கினார். பெருமாளை நினைத்து தியானித்தார். அப்போது பெருமாள் காட்சி கொடுத்து, "அம்பரீசன் என் பக்தன். அவனுக்கு நேரும் துன்பங்களை என் சுதர்சனச் சக்கரம் தடுத்துக் காக்கும். உண்மையான பக்தர்களின் எதிரிகளை அது அழிக்கும். அதுவே அதன் கடமை. அது என் கட்டுப்பாட்டில் இல்லை. பரம பாகவதனான அம்பரீசனிடமே சென்று நீர் செய்த அபசாரத்துக்கு மன்னிப்புக் கேளுங்கள். அவன் மனம் வைத்தால் நீர் பிழைக்கலாம்" என்று சொல்லி விடைபெற்றார்.

துர்வாசர் வேறு வழியின்றி அம்பரீசனிடம் ஓடினார். அவனை அடைக்கலம் புகுந்தார். அவன் பெருமாளை பிரார்த்திக்க சக்கராயுதம் துரத்துவதை நிறுத்தியது. அப்போது அங்கு வந்த நாரத மகரிஷி, அபரா ஏகாதசி மகிமையே இதற்கெல்லாம் காரணம் என்று எடுத்துரைத்து, துர்வாசர் கொடுத்த சாபம் இன்னும் மிச்சம் இருப்பதைச் சுட்டிக்காட்டி அதையும் போக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். அம்பரீசன் தலை தன் கால்களில் விழ வேண்டும் என்பதுவே அந்த சாபம். இதைக் கேட்டதும் அம்பரீசன் சாஷ்டாங்கமாக துர்வாச மகரிஷியின் கால்களில் வீழ்ந்து நமஸ்கரித்தான். மனம் மகிழ்ந்த துர்வாசர் பகவான் விஷ்ணுவைத் தொழுது பெருமாள் பக்தர்களின் பலத்தை இந்த நிகழ்வு உலகம் உள்ளவரை சொல்லும் என்று சொல்லியருளினார்.
இப்படிப்பட்ட அபரா ஏகாதசி நாளை (மே 23) மாலை 6.44 நிமிடங்கள் வரை உள்ளது. இந்த நாள் முழுவதும் விரதமிருந்து வழிபடுபவர்களின் எதிரிகள் காணாமல் போவார்கள். மறைமுக எதிரிகளும் தோற்று ஓடுவர். மறுநாள் (மே 24) காலை 5:25 முதல் 8:10க்குள் பாரனையை முடித்துவிட வேண்டும். அப்படிச் செய்பவர்களைப் பெருமாளும் சுதர்சன ஆழ்வாரும் ஓடிவந்து காப்பார்கள் என்பது ஞான நூல்கள் நமக்குச் சொல்லும் உண்மை.