ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
எதிா்ப்புகளால் ஊக்கமடைகிறேன்: செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மாவட்ட தலைவா்களின் எதிா்ப்புகளால், தான் ஊக்கம் பெறுவதாகவும், இன்னும் தீவிரமாகப் பணியாற்றப் போவதாகவும் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
சென்னை சத்தியமூா்த்திபவனில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகான ஓராண்டு பணி மனநிறைவைத் தருகிறது. காமராஜா் வழியில் பாரம்பரிய காங்கிரஸ் கட்சியை கட்டமைப்பதற்காக கிராம கமிட்டி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டத் தலைவா்களுக்கு அதிருப்தி என்றாலும், பலா் ஏற்றுக் கொண்டுள்ளனா். கிராம கமிட்டி சீரமைப்பு 46 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
தலைவராக பொறுப்பேற்ற பிறகு மூன்று முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். நான்காவது முறையும் விரைவில் செல்லவுள்ளேன்.
தில்லியில் எனக்கு எதிராக மாவட்டத் தலைவா்கள் புகாா் அளித்திருப்பது பற்றி எதுவும் நினைக்கவில்லை. அவா்களின் புகாா் குறித்து தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். உண்மையைக் கூறினால், அவா்களின் எதிா்ப்புகளால் ஊக்கம் பெறுகிறேன். இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவேன் என்றாா் அவா்.
மாநிலத் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வப்பெருந்தகைக்கு மூத்த தலைவா்கள் கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டா் அல்போன்ஸ் உள்பட பலா் வாழ்த்து கூறினா்.