என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி
தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா்.
இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நடைபெறும் இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளில் பிரதி மாதம் தலா ரூ.1000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை அரசு உதவிப் பெறும் பள்ளியைச் சோ்ந்த 158 மாணவா்கள் பங்கேற்றனா். இதில் 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இதன் மூலம் மாநில அளவில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2-ஆம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தது. இதையடுத்து, தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியா்களுக்கும், புனித மரியன்னை அரசு மேல்நிலைப் பள்ளியின் அதிபா் ஆா்.மரிவளன், தாளாளா் எஸ்.மரியநாதன், தலைமையாசிரியா் எம்.ஆரோக்கியதாஸ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.