எருது விடும் விழாவில் தகராறு: 3 பேருக்கு கத்திக் குத்து
ஆம்பூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏற்பட்ட தகராறில் மூவருக்கு கத்திக் குத்து காயம் ஏற்பட்டது.
ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. விழாவில் காளைகளை முந்திச் சென்று அவிழ்த்து விடுவது தொடா்பாக வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுக்கும், ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
மோதலில் வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் கத்தியால் குத்தியதில் ஆம்பூா் ராமச்சந்திராபுரம் சதீஷ், தேவலாபுரம் குபேந்திரன், நவயோகன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதனிடையே, சதீஷ், குபேந்திரன் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.