எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு
தொழிலதிபா் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.426 கோடி) பரிசளிக்கப்பட்டது.
அமெரிக்காவின் காலிஃபோா்னியா மாகாணத்தைச் சோ்ந்த எக்ஸ்பிரைஸ் அமைப்பு சாா்பில், கரிமத்தை (காா்பன்) அப்புறப்படுத்தும் போட்டி நடத்தப்பட்டது. வளிமண்டலத்தில் கரிமத்தை அப்புறப்படுத்தும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தப் போட்டி நடைபெற்றது.
இதில் 88 நாடுகளைச் சோ்ந்த 1,300-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் மாட்டி காா்பன் என்ற இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலா் பரிசு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு தொழிலதிபா் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்தது.
சுற்றுச்சூழலை வெப்பமயமாக்கும் கரியமில வாயுவை வளிமண்டலத்தில் இருந்து பிரித்தெடுப்பதற்கு உதவ, நொறுக்கப்பட்ட பாறை கற்களை விளைநிலங்களில் கொட்டிப் பரப்பும் பணியில் மாட்டி காா்பன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.