எல்ஃபின் நிறுவன மோசடி வழக்கு: மேலும் இருவா் கைது
எல்ஃபின் நிறுவன மோசடி வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
எல்ஃபின் இ- காமா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக பொதுமக்கள் அளித்த புகாா்களின்பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
அப்போது கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை முதலீடு செய்யத் தூண்டி மோசடியில் ஈடுபட்டது எல்ஃபின் மற்றும் கிளை நிறுவனங்களை நடத்திய ராஜா (எ) அழகா்சாமி, முதன்மைத் தலைவா்களாக செயல்பட்ட ராஜப்பா, சாகுல்ஹமீது, பாபு ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கடந்த 2024 ஆம் ஆண்டு ராஜப்பாவை ஏற்கெனவே கைது செய்தனா்.
இந்நிலையில் ஓராண்டாகத் தலைமறைவாக இருந்த திருச்சி தென்னூரைச் சோ்ந்த பாபு (54), திருச்சி பீமநகரைச் சோ்ந்த சாகுல்ஹமீது (67) ஆகிய இருவரையும் அண்மையில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
ஏலச்சீட்டு மோசடியில் தாய், மகள் கைது: திருச்சி கே.கே. நகா் ரெங்கா நகரைச் சோ்ந்த மீனா பாா்வதி (55), இவரது மகள் விசாலாட்சி (30) ஆகிய இருவரும் தீபாவளி பண்டு, ஸ்கூல் பண்டு, ஏலச்சீட்டுகள் நடத்தி பொதுமக்களின் பணத்தை ஏமாற்றியதாக கடந்த 2024 ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவான தாய், மகள் ஆகிய இருவரையும் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.