Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
பெல் ஊரகம் - சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து
திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
திருச்சி திருவெறும்பூா் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் எளிதாக சென்னைக்குச் சென்று வரும் வகையில், பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னை கிளம்பாக்கத்துக்கு நேரடியாக அரசுப் பேருந்து போக்குவரத்து இயக்க வேண்டுமென திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனா்.
இதனை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை புதிய வழித்தடத்தில் சென்னை கிளாம்பாக்கத்துக்கு அரசுப் பேருந்து இயக்க அமைச்சா் ஆவணம் செய்தாா். இதையடுத்து புதிய பேருந்து இயக்கத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
நிகழ்வுக்கு, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலப்பொது மேலாளா் முத்துகிருஷ்ணன் முன்னிலை வைத்தாா்.
இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, பேருந்தை தொடங்கி வைத்து, அப்பேருந்தில் சிறிதுதூரம் பயணித்தாா்.
இந்தப் பேருந்தானது, நாள்தோறும் இரவு 10 மணிக்கு பெல் டவுன்ஷிப்பில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்குப் புறப்படும். அதே போல் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மறுநாள் காலை 9 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.55 மணிக்கு பெல் டவுன்ஷிப் வந்தடையும்.
நிகழ்வில், பெல் செயல் இயக்குநா் எஸ். பிரபாகா், தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.