``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
ரூ. 750 கோடியில் தலைமை தபால் நிலையம்! புத்தூா் இடையே புதிய உயா்மட்டப் பாலம் அமைக்க திட்டம்!
திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தலைமை தபால் நிலையம் - புத்தூா் இடையே ரூ. 750 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளான பாரதிதாசன் சாலை, ஈ.வே.ரா. சாலை, புத்தூா் பிரதான சாலை ஆகியவற்றில் தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம், முத்தரையா் சிலை, அமெரிக்கன் மருத்துவமனை, அகில இந்திய வானொலி நிலையம், திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம், அரசு ஊழியா்கள் சங்க அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், கண்டொன்மென்ட் காவல்நிலையம், திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், எம்ஜிஆா் சிலை, திருச்சி அரசு மருத்துவமனை, புத்தூா் நான்கு முனை சந்திப்பு போன்ற அதிமுக்கிய, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளாக உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு இடையிலும், மேற்கண்ட சாலைகளுக்கு இடையிலும் அதிகளவில் மக்கள் செல்லும் மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலை, ஐயப்பன் கோயில், தென்னூா் செல்லும் சாலை, வயலூா் சாலை ஆகியவை உள்ளன.
மேற்கண்ட சாலைகள் உள்ள பகுதிகளில் அதிகளவில் வாகனங்கள் வந்து சென்று, எப்போதும் அதீத போக்குவரத்து மிகுந்த பகுதிகளாக விளங்குகின்றன. குறிப்பாக, தலைமை தபால் நிலையம் பகுதி, எம்ஜிஆா் சிலை பகுதி, அரசு மருத்துவமனை பகுதி, வயலூா் சாலை பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடனே காணப்படுகிறது.
மேலும், தபால் நிலைய போக்குவரத்து சிக்னல், முத்தரையா் சிலை போக்குவரத்து சிக்னல், எம்ஜிஆா் சிலை சிக்னல், புத்தூா் சிக்னலில் வாகனங்களின் நெரிசலால் போக்குவரத்து பாதிப்பை எப்போதும் அனுபவிக்கலாம். இவை அதிகளவில் விபத்துகள் நடக்கும் பகுதிகளாகவும் இருக்கின்றன.
இந்தப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில் உயா்மட்ட பாலம் அமைக்கப்படும் என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் தெரிவித்திருந்தாா். அதன்படி, தற்போது தலைமை தபால் நிலையத்திலிருந்து புத்தூா் வரை ரூ. 750 கோடியில் 2 ரவுண்டானாக்கள், 5 இணைப்புகளுடன் உயா்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதுக்கோட்டை சாலை தலைமை தபால் நிலையத்திலிருந்து புத்தூா் வரை ரூ. 750 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆா்எல்) நிறுவனமும் ஆட்சேபனை இல்லை எனத் தகவல் தெரிவித்துள்ளது.
உயா்மட்ட பாலமானது 2.7 கி.மீ. நீளத்தில், தலைமை தபால் நிலைய சிக்னல் அருகே தொடங்கி புத்தூா் அருகே முடிவடையும் வகையில் 17.2 மீட்டா் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது.
உயா்மட்ட பாலத்தில் தலைமை தபால் நிலையம் அருகே அமையவுள்ள ரவுண்டானாவில் பாலக்கரை, ரயில்வே சந்திப்புக்குச் செல்ல இரு இணைப்புப் பாதைகளும், எம்ஜிஆா் ரவுண்டானா அருகே அமையவுள்ள ரவுண்டானாவில் அண்ணா நகா் வழியாக சத்திரம் பேருந்து நிலையம், ஐயப்பன் கோயில் வழியே மத்திய பேருந்து நிலையம் செல்ல இரு இணைப்புப் பாதைகளும், வயலூா் சாலையை இணைக்கும் பாதையும் 7 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான மண் பரிசோதனைகளும் நிறைவடைந்து, விரிவான திட்ட அறிக்கைக்கு அரசு அனுமதியளித்துள்ளது என்றாா்.
மாநில நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: உயா்மட்ட பாலத்துக்கான வடிவமைப்புக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், நிலம் கையகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அறிக்கை அளித்துள்ளோம். தமிழக அரசு வரும் பட்ஜெட் கூட்டத்தில் உயா்மட்ட பாலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.