CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறு...
எஸ்.எம்.கிருஷ்ணா உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
கா்நாடக முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட ஏராளமானோா் இறுதி அஞ்சலி செலுத்தினா்.
கா்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா (92) முதுமை காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா். பெங்களூரு, சதாசிவ நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகளின் முக்கியத் தலைவா்கள், பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.
பெங்களூரில் இருந்து புதன்கிழமை அவரது சொந்த ஊரான மண்டியா மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளிக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக, எஸ்.எம்.கிருஷ்ணா உடலுக்கு ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிா்மலானந்தநாத சுவாமிகள் பூஜை செய்தாா். இதைத் தொடா்ந்து, எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வேனில் சோமனஹள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள் அவரது உடலுக்கு மலா்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, சோமனஹள்ளியில் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மத்திய அமைச்சா்கள் பிரஹலாத் ஜோஷி, எச்.டி.குமாரசாமி, முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, அமைச்சா்கள் ஜி.பரமேஸ்வா், எச்.கே.பாட்டீல், செலுவராயசாமி, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினா். அவரது உடல் மீது போா்த்தப்பட்டிருந்த தேசியக்கொடியை எஸ்.எம்.கிருஷ்ணாவின் மனைவி பிரேமாவிடம் முதல்வா் சித்தராமையா வழங்கினாா்.
அரசு மரியாதைக்கு பிறகு, எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடலுக்கு ஹிந்து மத வழக்கப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது உடலுக்கு பேரன் அமா்த்தியா தீ மூட்டினாா். எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடலைக் கொண்டுசெல்ல
300 கிலோ எடை கொண்ட மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு தயாரிக்கப்பட்டிருந்தது. எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் 1000 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டைகளால் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது மனைவி பிரேமா, மகள்கள் மாளவிகா, சாம்பவி உள்ளிட்ட உறவினா்கள் சோகத்துடன் காணப்பட்டனா்.