எஸ்.பி. வேலுமணி மகன் ரிசப்ஷன் : 1 லட்சம் பேர்; 30 வகை உணவுகள்; கோவையில் மாநாடு போல பிரமாண்டம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. வேலுமணி பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதால் தான் எடப்பாடி திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது.
கொடிசியா ஹாலில் பிரமாண்ட ஏற்பாடு
மறுபக்கம் இந்த திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி, மகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொடிசியா வளாகத்தில் இன்று (மார்ச் 10-ம் தேதி) திருமண வரவேற்பு நடைபெறவு உள்ளதாகவும், அதில் எடப்பாடி கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது. அதன்படி கோவை கொடிசியா ஹாலில் இன்று வேலுமணி மகன் விகாஷ் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதிமுக தொண்டர்களுக்கும் இன்று நடைபெறும் ரிசப்ஷனுக்கு தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
`முழுக்க முழுக்க அதிமுகவினருக்காக’
இன்றைய நிகழ்வு முழுக்க முழுக்க அதிமுகவினருக்காக நடத்தப்படும் விழா. ஏற்கெனவே வேலுமணி மீது எடப்பாடி வருத்தத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இன்று அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்து எந்தப் பிரச்னையும் இல்லை என்று நிரூபிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.

இதனால் இந்த ரிசப்ஷனை கட்சி மாநாடு போல பிரமாண்டமாக நடத்துகிறார். இதற்காக கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ,பி,சி ஆகிய மூன்று ஹால்கள் எடுக்கப்பட்டுள்ளன.
சுமார் 65,000க்கும் மேற்பட்ட அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரிசப்ஷனில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று அவரும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து பேச வாய்ப்புள்ளது என்கிறது அதிமுக வட்டாரம்.

பலர் நேற்றில் இருந்தே கொடிசியா வரத்தொடங்கிவிட்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் நேற்று இரவு வந்து மணமக்களை வாழ்த்தி சென்றார்.
30 வகை உணவுகள்
ரிசப்ஷனில் சுமார் 30 வகை உணவுகள் பரிமாறப்படவுள்ளன. மூன்று ஹால்களிலும் பஃபே முறையில் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவிஐபிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் கொடிசியா வளாகம் எதிர்புறம் உள்ள மைதானத்திலும் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக பிரமாண்ட நுழைவு, 100 அடி உயரத்தில் பேனர் மற்றும் கட்அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
