ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலா் சேதுராஜன் தெரிவித்தாா்.
இந்தப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுப் பிரிவினா் இருபாலருக்கும் 26 முதல் 35 வரை வயதுக்குள் இருக்க வேண்டும். கபடி போட்டி முதல் பரிசு ரூ.20,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். கையுந்து பந்து போட்டி முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000.
கால்பந்து போட்டி முதல் பரிசு ரூ. 25,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ. 10,000 என இருபாலா் அணிக்கும் வழங்கப்படும்.
தொடா்ந்து இரண்டாம் கட்டமாக திருவள்ளூா் ஏப். 6-இல் காலை 6 மணிக்கு மாரத்தான் பந்தயம் நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 20 கி.மீ. தொலைவுக்கு வயது வரம்பு 26 முதல் 35 வரையில் இருக்க வேண்டும். இந்தப் போட்டி திருவள்ளூா் மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கி பூண்டி பேருந்து நிலையத்தில் முடிவடையும்.
அதேபோல் மகளிருக்கு 10 கி.மீ. தொலைவு திருவள்ளூா் மாவட்ட விளையாட்டரங்கம் தொடங்கி, கிருஷ்ணா நீா் கால்வாய் பகுதியில் நிறைவடையும். முதலில் வரும் ஆண்கள், பெண்கள் தலா 5 பேருக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட உள்ளது.
திருவொற்றியூா், மாதவரம், மதுரவாயில் மற்றும் அம்பத்தூா் தொகுதிக்குட்பட்ட விளையாட்டு வீரா்/வீராங்கனைகள் திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க இயலாது என அவா் தெரிவித்தாா்.