ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான பணிகள்: காணொலி மூலம் முதல்வா் தொடங்கி வைத்தாா்
ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான மேம்படுத்தப்பட்ட பணிகளை தமிழக் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூா் பகுதியில் சுற்றுலாத் துறையின் சாா்பில் சாகச சுற்றுலாத் தலத்தில் நிலம் சீரமைப்பு, உணவக கட்டடம் மற்றும் வரவேற்பறை அமைத்தல், கீழ் மட்ட தண்ணீா் சேமிப்பு தொட்டி, நுழைவு வாயில், வாகன நிறுத்துமிடம், ஆழ்துளை கிணறு, மின்சார பணிகள் ஏலகிரியை பல்வேறு வசதிகள் கொண்ட முதன்மையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல் பணிகளுக்கு கடந்த 2021-22-ஆம் ஆண்டில் ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.இத்திட்டம் சுற்றுலாத்துறையில் இதுவரையில் இல்லாத புதிய முயற்சி ஆகும்.
இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக நுழைவுப் பகுதி, உணவகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய சாகச சுற்றுலாத் தளத்தை திறந்து வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து கட்டடங்களை பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில் ஜோலாா்பேட்டை ஒன்றிய குழு தலைவா் சத்யா சதிஷ்குமாா், ஒன்றிய குழு உறுப்பினா் சிந்துஜா, சுற்றுலா அலுவலா் (பொ)ஆனந்தன், முதுநிலை மேலாளா் தினேஷ் குமாா், மேலாளா் ஜாபா் அலி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் உதவி பொறியாளா் நவீன்குமாா், ஊராட்சி மன்ற தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.