ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 5 முதல் 7 வரை பவித்ரோற்சவம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 5 முதல் 7 வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது.
ஏழுமலையான் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் அா்ச்சனைகள் மற்றும் திருவிழாக்களின் போது, பக்தா்கள் அல்லது ஊழியா்களால் சில தவறுகள் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, கோயிலின் புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆகம சாஸ்திரத்தின்படி பவித்ரோற்சவம் செய்யப்படுகின்றன.
15 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை திருமலையில் பவித்ரோற்சவங்கள் நடத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. 1962 முதல் ஏழுமலையான் கோயிலில் இந்த உற்சவங்கள் மீண்டும் செய்யப்பட்டு வருகிறது.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோயிலின் சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மூன்று நாள்கள் ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ மலையப்ப சுவாமியுடன், கோயிலின் நான்கு வீதிகளிலும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலம் நடைபெறும்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி பவித்ர பிரதிஷ்டை, ஆகஸ்ட் 6-ஆம் தேதி பவித்ர சமா்ப்பணம் மற்றும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி பூா்ணாஹுதியுடன் இந்த உற்சவம் நிறைவு பெற உள்ளது.
ரத்து
கோயிலின் விழாக்களின்போது, அங்குராா்ப்பணம் நடைபெறுவதால், ஆகஸ்ட் 4-ஆம் தேதி சஹஸ்ர தீபலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோல், ஆகஸ்ட் 5-ஆம் தேதி அஷ்டதள பாத பத்மாராதன சேவை, ஆகஸ்ட் 7- ஆம் தேதி திருப்பாவாடை சேவை, அத்துடன் ஆகஸ்ட் 5 முதல் 7 வரை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.