ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இதற்காக, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.
அதேநேரம், கூலி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்ததால் சமூக வலைதளங்களில் அதனை வரவேற்றும் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு குழந்தை ரசிகர்களும் உள்ளதால் அவர்களால் படம் பார்க்க முடியவில்லை என்றால் பெரிய வணிக வெற்றி சாத்தியமில்லை என ரசிகர்கள் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளனர். இன்னொரு பக்கம், லோகேஷ் கனகராஜின் முதல் ஏ சான்றிதழ் படம் கண்டிப்பாக ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இதை வரவேற்கிறோம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ’ஏ’ சான்றிதழ் பெற்ற படமாக கூலி உருவாகியுள்ளது. இறுதியாக, கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான சிவா திரைப்படம் ரஜினியின் ’ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தது.
இப்படங்களைத் தவிர்த்து, ரஜினி நடித்த மூன்று முடிச்சு (1976), தப்புத்தாளங்கள் (1978), காளி (1980), நெற்றிக்கண் (1981), சிவப்பு சூரியன் (1983), நான் மகான் அல்ல (1984), நான் சிவப்பு மனிதன் (1985), ஊர்க்காவலன் (1987) ஆகிய படங்களும் ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள்தான். இதில், சில படங்கள் பெரிய வெற்றியையும் பதிவு செய்துள்ளன.
இதையும் படிக்க: கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!