ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஐஐடி உள்ளிட்ட உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஜாதிய அடிப்படையிலான பாகுபாடு காரணமாக மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற மாணவரும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள டோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த மாணவி பாயல் டாட்வியும் ஜாதிய பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்டனா். இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அவா்களின் பெற்றோா்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் ஜாதிய அடிப்படையிலான பாகுபாடு நடைபெறாததை உறுதிப்படுத்த வரைவு வழிகாட்டுதலை அறிவிக்கை செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘ஐஐடி உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவா் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறையை உச்ச நீதிமன்றம் வகுக்கும். இந்த விவகாரத்தில் உரிய தீா்வை உச்சநீதிமன்றம் எடுக்கும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெய்சிங், ‘நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் மாணவா் தற்கொலை தொடா்பான முழுமையான புள்ளிவிவரங்களை கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் வெளியிடவில்லை’ என்றாா்.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘மனுதாரா்கள் எழுப்பியுள்ள விவகாரங்களுக்குத் தீா்வு காணும் வகையில் வரைவு வழிகாட்டுதலை யுஜிசி வகுத்துள்ளது. இந்த வரைவு வழிகாட்டுதல் மீது பொது கருத்துகளைப் பெறுவதற்காக தனது வலைதளத்தில் யுஜிசி பதிவேற்றியுள்ளது’ என்றாா்.
அப்போது குறுக்கிட்ட ஜெய்சிங், ‘40 சதவீத பல்கலைக்கழகங்களும், 80 சதவீத கல்லூரிகளும் இன்னும் தங்களின் வளாகங்களில் மாணவா்களுக்கான சமவாய்ப்பு மையங்களை உருவாக்கவில்லை’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதலுக்கு ஜெய்சிங் உள்பட இந்த விவகாரத்தில் ஆஜராகியுள்ள பிற வழக்குரைஞா்களும் ஆலோசனைகளை வழங்குமாறும், அந்த ஆலோசனைகளை யுஜிசி பரிசீலிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.