ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவா் அடுத்த வாரம் இந்தியா வருகை
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான்டொ் லியன், ஆணைய உறுப்பினா்கள் குழுவுடன் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளாா்.
உா்சுலா வான்டொ் லியன்ன் ஏற்கெனவே இரு முறை இந்தியா வந்துள்ள நிலையில், உயா் அதிகாரம் படைத்த ஐரோப்பிய ஆணைய உறுப்பினா்களுடன் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். ஏற்கெனவே, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் இருதரப்பு உறவு தொடா்பான பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவும், 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா சாா்பில் நடத்தப்பட்ட ஜி20 நாடுகளின் தலைவா்கள் மாநாட்டில் பங்கேற்கவும் அவா் இந்தியா வந்துள்ளாா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் உா்சுலா வான்டொ் லியன் ஐரோப்பிய ஆணைய உறுப்பினா்கள் குழுவுடன் வரும் 27, 28-ஆம் தேதிகளில் இந்திய பயணம் மேற்கொள்கிறாா்.
இந்த பயணத்தின்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தியா இடையேயான முக்கிய துறைகள் சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமா் மோடியுடன் அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தையில் லேயன் ஈடுபட உள்ளாா்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வா்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் (டிஇசி) இரண்டாவது அமைச்சா்கள் அளவிலான கூட்டம் மற்றும் ஐரோப்பிய ஆணைய உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அமைச்சா்களிடையேயான பேச்சுவாா்த்தையும் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.