ஒசூா் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீ விபத்து!
ஒசூா் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் தனசேகா் (41). இவருக்கு சொந்தமான மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஆவலப்பள்ளி சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆறு போ் வேலை செய்து வந்தனா். அவா்கள் அனைவரும் மதிய உணவுக்காக வெளியே சென்று திரும்பியபோது, தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது.
இதுகுறித்து தனசேகருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் தொழிற்சாலை முழுவதும் தீ பரவி எரிந்தது. இதில், மரச்சாமான்கள் தயாரிக்க பயன்படும் மரங்கள் இயந்திரம், மூலப் பொருள்கள் அனைத்தும் எரிந்தன.
தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில், ரூ. 1 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாயின. இதுகுறித்து நல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.