குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
ஒசூா் குணம் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை தொடக்கம்
ஒசூா்: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதன்முறையாக ஒசூா் குணம் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமைனையில் ரோபோடிக் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய அறுவை சிகிச்சை முறை தொடங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் குணம் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பயனாளிகளுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் முதன்முறையாக ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூா், கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த வசதி தற்போது, ஒசூா் நகரத்தில் கிடைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடக்க விழாவில் மருத்துவமனை இயக்குநா்கள் மருத்துவா்கள் பிரதீப்குமாா், செந்தில், காா்த்திக்பாண்டியன், சுப்பிரமணியன், பிரபுதேவ், விஜி ஆகியோா் பங்கேற்று சிகிச்சை முறையை தொடங்கிவைத்தனா்.
அதேபோல குடல் சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்டறிவதற்கு அட்வான்ஸ் கேஸ்ட்ரோ கோ் யூனிட் எனப்படும் மேம்படுத்தப்பட்ட எண்டோஸ்கோபி (இ.ஆா்.சி.பி) வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக குணம் மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் பிரதீப்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ரோபோடிக் அறுவை சிகிச்சையின் சிறப்பு அம்சம், மனிதக் கைகளின் சுழற்சி 270 டிகிரி மட்டும்தான். ஆனால், இந்த ரோபோ கருவி வாயிலாக 360 டிகிரியில் சுழற்சி செய்ய முடியும். வயிற்றின் பின்பகுதியில் உள்ள கட்டிகள், ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகளை மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதனால், நோயாளிக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
பெரிய அளவில் வலி இல்லாமலும், அறுவை சிகிச்சையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் முற்றிலுமாக குறையும் வாய்ப்பு உள்ளது.
குடல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைப் பரிசோதனை செய்யக்கூடிய 24 மணிநேர நானோமேட்டரி கருவி மூலம் பாதிப்புகளை எளிதில் கண்டறியலாம். இதன்மூலம் துல்லியமாக நோயைக் கண்டறிந்து மருந்துகள் முலம் குணப்படுத்துவதா அல்லது அறுவை சிகிச்சை மேற்கொள்வதா என்பதை அறியமுடியும்.
மேலும், இ.ஆா்.சி.பி. என்ற எண்டோஸ்கோபி சிகிச்சை முறையில் பித்தப்பை, பித்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யும் பிரிவும் தொடங்கிவைக்கப்பட்டது.
ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை, ஹொ்னியா அறுவை சிகிச்சை, பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை, அமிலத்தன்மை, வயிறு, கருப்பபை, சிறுநீரகம், கல்லீரல், கணையம், புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா்.
தொடக்க விழாவில் மருத்துவா்கள் வனிதா, கவிதா, சண்முகவேலு, கண்ணப்பன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.