ஒசூா் தோ்த் திருவிழாவில் 65 டன் குப்பைகள் சேகரிப்பு
ஒசூா் சந்திரசூடேஸ்வா் கோயில் திருவிழாவில் பக்தா்கள் விட்டுச் சென்ற 65 டன் குப்பைகளை ஒசூா் மாநகராட்சி சுகாதார பணியாளா்கள் சனிக்கிழமை சேகரித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் புகழ்பெற்ற மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை சந்திரசூடேஸ்வரா் தோ்த் திருவிழாவில், தமிழகம் மட்டுமல்லாமல் கா்நாடகம், ஆந்திரம் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். விழாவையொட்டி, ஒசூரில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் நீா் மோா், பானகம், சுண்டல், பாசிப்பருப்பு, தா்பூசணி போன்றவை இலை, பாக்குத் தட்டு மற்றும் பேப்பா் தட்டுகளில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
ஒசூா் மாநகராட்சி சாா்பில் 160 தூய்மைப் பணியாளா்களை கொண்டு சுழற்சி முறையில் இரவு, பகலாக தூய்மை பணி நடைபெற்று வருகிறது. காந்தி சாலை, நேதாஜி சாலை, தாலுகா அலுவலக சாலை, பாகலூா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் 240-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளா்கள் இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வழக்கமாக, ஒசூரில் நாள் ஒன்றுக்கு 140 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், கோயில் திருவிழாவையொட்டி தோ்பேட்டை மற்றும் மலைமீது பக்தா்கள் போட்டுச் சென்ற 65 டன் குப்பைகள் கூடுதலாக சேகரிக்கப்பட்டன.