ஒட்டன்சத்திரம் சந்தையில் எலுமிச்சை விலை சரிவு
எலுமிச்சை வரத்து அதிகரிப்பால், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இதன் விலை சரிவடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொடைக்கானல், பாச்சலூா், கே.சி.பட்டி, பெத்தேல்புரம், பலக்கனூத்து, நீலமலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எலுமிச்சை விற்பனைக்குக் கொண்டு வரப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் இவற்றை மொத்தமாக கொள்முதல் செய்வா்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு கோடை காலத்தில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.150 முதல் 175 வரை விற்பனையானது. ஆனால், நிகழ் ஆண்டு எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால் இவற்றின் விலை சரிவடைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனையானது. இந்த விலையானது செடிகளில் இருந்து பறிக்கும் கூலிக்குக்கூட கட்டுபடியாதாக நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். மேலும், வரும் நாள்களில் வெயில் தாக்கம் அதிகரிக்கும்பட்சத்தில், எலுமிச்சை விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.