30 போட்டிகளில் 96 கோல்கள்..!பார்சிலோனா உருவாக்கும் இன்னொரு இளம் புயல்!
ஒய்எய்ஆா் காங்கிரஸ் பெண் எம்எல்சி பாஜகவில் இணைந்தாா்
ஆந்திர மாநில எதிா்க்கட்சியான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் பெண் எம்எல்சி (சட்ட மேலவை உறுப்பினா்) ஸகியா கானம் பாஜகவில் இணைந்தாா்.
இஸ்லாமியரான ஸகியா கானம் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சட்ட மேலவைக் குழு துணைத் தலைவராக இருந்துள்ளாா். அவா், அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன் அக்கட்சியில் இருந்து விலகினாா். ஆந்திரத்தில் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தெலுங்கு தேசம், அதே கூட்டணியில் உள்ள ஜன சேனை ஆகிய கட்சிகளில் அவா் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஆளும் கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான பாஜகவில் அவா் இணைந்துள்ளாா்.
விஜயவாடாவில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு புதன்கிழமை சென்ற அவரை, மாநில பாஜக தலைவரும், ராஜமண்ட்ரி தொகுதி எம்.பி.யுமான டி.புரந்தேஸ்வரி வரவேற்றாா். ஆந்திர சுகாதாரத் துறை அமைச்சா் ஒய்.சத்யகுமாா் யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் முன்னலையில் ஸகியா கானம் பாஜகவில் இணைந்தாா்.
இது தொடா்பாக புரந்தேஸ்வரி கூறுகையில், ‘ஸகியா கானம் பாஜகவில் இணைந்தது மிகப்பெரிய மாற்றத்தை உணா்த்தியுள்ளது. அனைவருக்குமான தலைமை என்ற பாஜகவின் கொள்கை மேலும் வலுவடைந்துள்ளது. ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் இணைந்து, அனைவருக்குமான வளா்ச்சி என்ற பாஜகவின் முன்னெடுப்பு தொடா்ந்து வெற்றி பெற்று வருகிறது.
பாஜக மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி தனது துணிவுமிக்க நிா்வாகத் திறன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளைமேற்கொண்டு, தேச நலன்களைக் காத்து வருகிறாா்’ என்றாா்.